
தமிழகத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான பீலா வெங்கடேசன் கேளம்பாக்கம் அடுத்த தையூர் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். இவரின் முன்னாள் கணவரான தமிழகத்தின் ஓய்வுபெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கடந்த மே 21 ஆம் தேதி அவரின் நண்பர்களுடன் பீலா வெங்கடேசனின் பண்ணை வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் பீலா வெங்கடேசன் இது குறித்து புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் போலீசார், ராஜேஷ் தாஸ் மீது கொலை மிரட்டல், சட்ட விரோதமாகக் கூடுதல், தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே ராஜேஷ் தாஸ் வசித்து வரும் செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் உள்ள பங்களா வீட்டில் கடந்த மே 20 ஆம் தேதி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பீலா வெங்கடேசன் தமிழக அரசின் எரிசக்தித் துறையின் முதன்மை செயலாளராக இருப்பதால் அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக ராஜேஷ் தாஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதே சமயம் ராஜேஷ் தாஸ் வசித்து வரும் வீட்டின் மின் இணைப்பு பதிவு பீலா வெங்கடேசன் பெயரில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தற்போது அவர் மின் இணைப்பு வேண்டாம் எனக் கூறி அளித்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வீட்டுக் காவலாளியைத் தாக்கிய வழக்கில் ராஜேஷ் தாஸ் கேளம்பாக்கம் போலீசாரால் கடந்த 24 ஆம் தேதி (24.05.2024) காலை கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து நீதிமன்ற பிணையில் ராஜேஷ் தாஸ் விடுவிக்கப்பட்டார். அதே சமயம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஒன்றைச் செய்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது பீலா வெங்கடேசன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார். அவர், “தையூர் பங்களா வீட்டில் வீட்டின் மின்சார இணைப்பு ஏற்கனவே துண்டிக்கப்பட்டு விட்டதால் இந்த மனு செல்லத்தக்கதல்ல. பீலா வெங்கடேசன் பெயரில் மின் இனைப்பைத் தற்காலிகமாகத் துண்டிக்கும் படி கோரிக்கை வைப்பதற்கு முழு அதிகாரம் உள்ளது. ராஜேஸ் தாஸுக்கு சொந்தமாக நுங்கம்பாக்கத்தில் ஒரு விடும், பல இடங்களில் தங்கும் விடுதிகளும் உள்ளதால் அந்த இடங்களில் அவர் தங்கிக்கொள்ளலாம்” என வாதிட்டார்.

அதற்கு ராஜேஷ் தாஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி. பிரகாஷ், “அந்த வீட்டிற்கான வீட்டுக்கடனை ராஜேஷ் தாஸ் தான் செலுத்தி வருகிறார். எனவே, அவருடைய உடல் நலனைக் கருத்தில் கொண்டு மீண்டும் மின் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார். இதனையடுத்து இந்த வழக்குத் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று (11.06.2024) தீர்ப்பளித்த நீதிபதி அனிதா சுமந்த், “இந்த வசிப்பிடம் குறித்து இந்த நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது. சம்பந்தப்பட்ட நீதிமன்றம் தான் தீர்மானிக்க முடியும். இருவரும் சமரசம் மையத்திற்குச் சென்று சமரசம் செய்துகொள்ள உத்தரவிட முடியாது” எனக் கூறி ராஜேஷ் தாஸின் மனுவை நிராகரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.