வடிவேலுவின் சூனாபானா கேரக்டர்தான் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் எ.வ. வேலு விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டப்பேரவையில் முதலமைச்சரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பயந்து ஓடிய கோழை பழனிசாமி, வெளியே சென்று வழக்கம் போலவே தன் உளறல்களை பேட்டியாக கொட்டியிருக்கிறார். சட்டப்பேரவையில் முதலமைச்சரும் அமைச்சர்களும் சான்றுகளுடன் தோலுரித்த விரக்தியில் செய்தியாளர்களிடம் வண்டி வண்டியாக பொய்களை கொட்டியிருக்கிறார் பச்சைப் பொய் பழனிசாமி. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார் பழனிசாமி. இப்படிதான் விக்கிரவாண்டி இடைத் தேர்தலையும் புறக்கணித்தார். இது தேர்தல் புறக்கணிப்பு அல்ல. பழனிசாமி தலைமை மீதான ஆளுமை அசிங்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு இது.
2017 ஆர்.கே.நகர் இடைத் தேர்தல், 2019 நாடாளுமன்ற தேர்தல், 2019-ல் நடந்த 22 சட்டசபை தொகுதிகளின் இடைத் தேர்தல், 2019-ல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2021-ல் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022-ல் நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், விளவங்கோடு இடைத் தேர்தல் என தொடர்ந்து 10 தேர்தல்களில் தோற்றவர்தான் புரட்சித் தமிழர். ஈரோடு கிழக்கு தேர்தலிலும் தோற்று, ‘11 தோல்வி பழனிசாமி’ என்ற அவப் பெயரை துடைக்க தேர்தலில் போட்டியிடாமல் கோழை போல பழனிசாமி களத்தைவிட்டே ஓடியிருக்கிறார். தன்னுடைய எஜமான் பாஜகவின் ஓட்டு வங்கிக்கு சேதாரம் வந்துவிடக் கூடாது என்பதற்காக பாதம்தாங்கி பழனிசாமி தேர்தல் புறக்கணிப்பு என்ற கூத்தை அரங்கேற்றியிருக்கிறார். தான் அசிங்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அதிமுகவையே பலீபீடமாக்கியிருக்கிறார். 2026 சட்டசபை தேர்தலுக்காவது வருவாரா? அல்லது ஓடி ஒளிவாரா?.
‘சட்டசபையில் நான் 2 மணி நேரம் பேசிய வீடியோவை கேட்டால் தரவில்லை’ என சொல்லியிருக்கிறார் பழனிசாமி. உங்கள் ஆட்சியின் லட்சணம் என்ன? என தெரிந்து கொண்டாவது பழனிசாமி பேட்டி கொடுத்திருக்கலாம். அதிமுக ஆட்சியில், ‘சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்’ என ஜெகதீசன் என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கில், ‘நிதி நெருக்கடி காரணமாக நேரடி ஒளிபரப்புக்கு வாய்ப்பில்லை’ என்று நீதிமன்றத்தில் கையை விரித்தவர்கள்தான், இன்று நேரடி ஒளிபரப்பை செய்யும் எங்களைப் பார்த்து வியாக்கியானம் பேசுகிறார்கள். அதிமுகவின் பத்தாண்டு ஆட்சியில் சட்டசபை நடவடிக்கைகளை அரசின் திரைப்படப் பிரிவின் சார்பில் வீடியோ எடுத்து எடிட் செய்து அவர்கள்தான் டிவிக்களுக்கு வழங்கினார்கள். அதில் ஆளும் கட்சியின் நடவடிக்கைகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன. எதிர்க் கட்சியினர் புறக்கணிக்கப்பட்டார்கள் என்பது நினைவில் இல்லையா?.
மாணவர்களின் மருத்து கனவை சீரழிக்கும் நீட் தேர்வை தனது ஆட்சிக்காலத்தில் பாஜகவுடன் சேர்ந்து கொண்டு வந்து துரோகம் செய்தவர் பழனிசாமி. அதை மறைக்க திராவிட மாடல் அரசின் மீது வீண்பழியை சுமத்துகிறார். நீட் தேர்வை ரத்து செய்ய ஏ.கே. ராஜன் கமிட்டி நியமனம், அந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்டமன்றத்தில் நீட் ரத்து மசோதா என நீட் தேர்வை ரத்து செய்ய என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனை வழிகளிலும் திராவிட மாடல் அரசு முயற்சிகளை செய்து வருகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள். நீட் தேர்விற்கு எதிராக திமுக அரசியல் ரீதியாகவும் சட்டரீதியாகவும் போராடியது. அப்படி நடத்திய போராட்டங்களை அதிமுகவால் பட்டியல் காட்ட முடியும்?.
‘நீட் தேர்வு விலக்கு மசோதா கிடப்பில் போடப்பட்டு, வழக்கு நீதிமன்றத்துக்கு வந்து ஓராண்டுக்கு வெளியிலேயே தெரியாமல் அதிமுக ஆட்சியில்தான் இருந்தது. சட்டப்பேரவையில் கூட நீங்கள் தெரிவிக்கவில்லை’ என முதலமைச்சர் கேள்வியெழுப்பி பழனிசாமியின் துரோகத்தை தோலுரித்தார். அதற்கு பதில் சொல்ல கோழை பழனிசாமிக்கு துணிவு இருந்ததா?. நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம் என பிடிவாதமாக நடைமுறைப்படுத்தி வரும் பாஜகவோடு அதிமுக கள்ளக்கூட்டாளி வைத்திருக்கிறது. அந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என ‘இந்தியா’கூட்டணியை வலுப்படுத்தியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ராகுல் காந்தியும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி அளித்தார்.
துரதிஷ்டவசமாக மீண்டும் பாஜக ஆட்சிக் கட்டிலேறிவிட்டது. நீட் தேர்வை ரத்து செய்யாமல் ஆதிக்கம் செய்யும் தனது கள்ளக்கூட்டாளி பாஜகவைப் பற்றி விமர்சிக்க கோழை பழனிசாமிக்கு மனம் வரவில்லையே ஏன்?. எடப்பாடி பழனிசாமி உறவினர் என். ராமலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து 5வது நாளாக வருமானவரித் துறை சோதனை நடைபெற்றது. அடுத்து நம்ம வீட்டுக்கு வந்துவிடுவார்களோ என்ற பயம் பழனிசாமிக்கு இருக்குமல்லவா? ‘கோபால் என்னை போல தைரியமான ஆளா... பயந்தவன் தானே. விரட்டி விரட்டி வெட்டினது எல்லாம் ஞாபகத்துக்கு வந்து போகும் இல்லையா’’ என வடிவேலுவின் சூனாபானா கேரக்டர்தான் பழனிசாமி” எனத் தெரிவித்துள்ளார்.