தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தொடர்ந்து கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கட்சியின் பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட முதன்மை நிர்வாகிகளை அவ்வப்போது சந்தித்து கட்சி பணிகள் குறித்துக் கேட்டு வருகிறார். முன்னதாக மாநாடு முடிந்த கையோடு செயற்குழு கூட்டம் நடந்த நிலையில் பொதுச்செயலாளர் அனந்துக்கு ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று கட்சியின் கள நிலவரம் குறித்து ஆய்வு செய்து மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுப்பது தொடர்பாக ஆய்வறிக்கை சமர்ப்பிக்குமாறு விஜய் உத்தரவிட்டதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் சென்னைக்கு புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை எதிர்த்துப் போராடும் பரந்தூர் கிராம மக்களை த.வெ.க. தலைவர் விஜய் சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத் திட்டத்திற்குப் பாதுகாப்பு தரக் கோரி காஞ்சிபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு விஜய் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக காவல்துறைக்கு அளிக்கப்பட்டுள்ள கடிதத்தில், “விஜய் வருகையையொட்டி ஜனவரி 19 அல்லது 20ஆம் தேதிகளில் அனுமதி தரும்படி கோரிக்கை வைத்துள்ளதாக கூற்படுகிறது. இதன் மூலம் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தபிறகு முதல்முறையாக மக்களைச் சந்திக்க உள்ளார். முன்னதாக விஜய் மக்களைச் சந்திக்கக் களத்திற்கு வரவில்லை என பல்வேறு அரசியல் கட்சியினரும் விமர்சனம் செய்திருந்தனர்.
சென்னையின் இரண்டாவது விமான நிலையமாகக் காஞ்சிபுரம் பரந்தூரில் 5,368 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய விமான நிலையம் அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக பரந்தூர் கிராமங்களைச் சேர்ந்த வளத்தூர், தண்டலூர், சிங்கிலி பாடி, அக்கம்மாப்பாக்கம், ஏகனாபுரம் உள்ளிட்ட 12 கிராமங்களில் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த திட்டத்திற்கு அந்த பகுதியில் உள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்துப் பல நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.