ரஜினிகாந்த் - பா.ரஞ்சித் கூட்டணியில் வெளியான 'காலா' படத்தில் 'உரிமையை மீட்போம்' பாடலை எழுதியதன் மூலம் திரைத்துறையில் அறிமுகமான தெருக்குரல் அறிவு, விஜய்யின் 'மாஸ்டர்' பட 'வாத்தி ரெய்டு' பாடலின் மூலம் பிரபலமானார். இதனிடையே தனுஷ், ஜீவா உள்ளிட்ட சில முன்னணி நடிகர்களின் படங்களில் பாடகராவும் எழுத்தாளராகவும் பயணித்துள்ளார். அதை தொடர்ந்தும் வருகிறார். இது போக பல ஆல்பம் பாடல்களை பாடியுள்ள அறிவு, கடந்த ஆண்டு வெளியான ‘என்ஜாய் எஞ்சாமி' ஆல்பம் பாடல் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தார். இந்தப் பாடலின் மூலம் பெரிய அளவில் கவனம் பெற்ற அறிவு வெளிநாடுகளிலும் இசைக்கச்சேரியை நடத்தி வருகிறார்.
இதனிடையே கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கல்பனா அம்பேத்கர் என்ற பெண்ணைக் காதலித்து வருவதாக தனது சமூக வலைதளப் பக்கங்களின் வாயிலாக தெரிவித்தார். கல்பனா அம்பேத்கர், ஆண்டுதோறும் மார்கழியில் நடந்து வரும் 'மார்கழியில் மக்களிசை' கலைத்திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் தெருக்குரல் அறிவு - கல்பனா அம்பேத்கர் இருவருக்கும் இன்று திருமணம் நடந்துள்ளது. இவர்களது திருமணம் சென்னை தியாகராயர் நகரில் அமைந்துள்ள இளையராஜா ஸ்டுடியோவில் அவரது தலைமையில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் வி.சி.க. தலைவர் மற்றும் எம்.பி. திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது தெருக்குரல் அறிவு அம்பேத்கர் பற்றிய பாடலை பாடினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.