
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தஞ்சாவூர் அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பைசல் என்பவர் பழைய வீட்டை புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டு வந்துள்ளார். மணிகண்டன் என்பவர் கொத்தனாராக பணியாற்றிக் கொண்டிருந்தார். குமார் என்பவர் உதவியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்பொழுது வீட்டின் அடிப்புறத்தில் பணி செய்து கொண்டிருந்த பொழுது மேற்புறம் திடீரென இடிந்து விழுந்தது.
இதில் இடிபாடுகளில் சிக்கி இருவரும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். உடனடியாக தீயணைப்புத்துறை தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் இடிபாடுகளை நீக்கி அவர்களை மீட்க முற்பட்டனர். உடனடியாக இருவரும் மீட்கப்பட்டு அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் போகும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. உடனடியாக இருவரது உடலும் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உயிரிழந்த மணிகண்டனுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் குமாருக்கு திருமணம் ஆகவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.