இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ஆம் தேதி தொடங்கி இன்று (11.01.2025) வரை நடைபெற்றது. இதில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிப்பது மீதான விவாதம் முடிவடைந்த நிலையில் தமிழக முதல்வர் பதிலுரை வழங்கினார். அப்போது அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசினார். அதில், “இந்த அரசு பதவி ஏற்றபின் ஏழை எளிய பட்டியலின மக்களுக்கு 2 இலட்சத்து 67 ஆயிரத்து 437 மனைகளை வரன் முறைப்படுத்தி இ-பட்டா வழங்கப்பட்டிருக்கின்றன.
அடுத்த இரண்டு ஆண்டுகளில், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்விதமாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களைச் சீர்செய்தும் புதியதாக நிலங்களைக் கையகப்படுத்தியும் ஒரு இலட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் அவர்களுக்கு வழங்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து, சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
ஏழை எளிய பட்டியலின மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களைச் சீர்செய்தும், புதியதாக நிலங்களைக் கையகப்படுத்தியும் ஒரு இலட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும் என்று அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக்கொண்டனர். இந்த சந்திப்பின்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களான சிந்தனைச்செல்வன், எஸ்.எஸ். பாலாஜி, ஜெ. முகம்மது ஷா நவாஸ், எம். பாபு ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.