புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக திருட்டு சம்பவங்கள் மக்களை அச்சுறுத்தியது. இன்று ஆங்காங்கே நடந்த கோர விபத்துகளில் 6 பேர் பலி, 45 பேருக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் புதுக்கோட்டை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று (புதன் கிழமை) மாலை திருச்சி- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் நார்த்தாமலை அருகே வேகமாக சென்று கொண்டிருந்த ஒரு இன்னோவா கார் பின்பக்கம் சக்கரத்தின் அச்சு உடைந்து பக்கமாக வந்த காரில் மீது மோத அடுத்தடுத்து பின்னால் வந்த 7 கார்கள் மோதிக் கொண்டது. ஹாலிவுட் படங்களில் வரும் விபத்து போல அந்த கோரச் சம்பவம் நடந்துள்ளது.
இந்த கோர விபத்தில் தொடையூர் சிதம்பரம், உடையாணிப்பட்டி ரெங்கராஜ், வேகுப்பட்டி நாகரத்தினம், மற்றும் நாகலெட்சுமி, செல்வம் என 5 பேர் உயிரிழந்தனர். 21 பேர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுக்கோட்டை எஸ்.பி. செல்வராஜ் மீட்பு பணிகளை முடுக்கி விட்டார். அந்த வழியாக வந்தவர்களும், போலீசாருடன் இணைந்து ஈடுபட்டனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ்கள் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அதேபோல் புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில் உள்ள உள்ள தனியார் கல்லூரி முடிந்து பேருந்துக்காக காத்திருந்த மாணவிகள் மீது அந்த வழியாக வேகமாக சென்ற கார் மோதிய விபத்தில் 4 மாணவிகள் படுகாயத்துடன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் அறந்தாங்கி கோட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் மீது ஒரு தனியார் பேருந்து மோதி தலை நசுங்கி அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பொன்னமராவதி அருகில் உள்ள சத்தியமூர்த்திபுரம் புறகரைப்பட்டியிலிருந்து ரஞ்சித் (30) என்பவரின் மினி வேனில் 30 பேர் மேக்கினிப்பட்டி கிராமத்திற்கு துக்கம் விசாரிக்கச் சென்றனர். அந்த மினி வேன் திடிரென்று கவிழ்ந்து 20 பேர் படுகாயமடைந்தனர். அதில் 10 பேர் பொன்னமராவதி அரசு மருத்துவமனையிலும், 10 பேர் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஒரே நாளில் மட்டும் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அடுத்தடுத்து நடந்த கோர விபத்துகளில் 6 பேர் பலியானதுடன் 45 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.