கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள கிள்ளை பேரூராட்சியில் அனைத்து கட்சியினர் மற்றும் 10 கிராமங்களை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் கூட்டம் நடைபெற்றது. திமுக தலைமைச்செயற்குழு உறுப்பினரும், பேரூர் கழக செயலாளருமான, கிள்ளை ரவிந்திரன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார், காங்கிரஸ் கட்சி சார்பில் இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சசிகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நகர செயலாளர்கள் விஸ்வநாத், ராமதாஸ் மற்றும் பொன்னன்திட்டு சிங்காரகுப்பம், சி மானம்பாடி,உள்ளிட்ட கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கிள்ளை பக்கிங்காம் கால்வாய் வாய் பகுதிகளில் உள்ள தனியார் இறால் பண்ணைகள் கழிவு நீரை வாய்காலில் விடுகின்றனர். இதனால் சுற்றுசூழல் பாதிக்கப்படுகிறது. இறால் பண்ணைகளை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியர், சிதம்பரம் சார் ஆட்சியர் என சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வரும் ஆகஸ்ட் 7- ஆம் தேதி பரங்கிப்பேட்டை மீன்வளத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தை அனைத்து கட்சியினர் மற்றும் 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு முற்றுகைப் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.