ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்டு 10 மணி நேர சட்டப்போராட்டத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். ஆசிரியரின் விடுதலை மூலம் பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்கப்பட்டது என்று ஊடகத்துறையினர் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ‘விடுதலை’ ஏட்டின் சார்பில் 11.10.2018 வியாழக்கிழமை மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும் - பாராட்டும் என்ற நிகழ்ச்சி நடைப்பெற்றது.
‘விடுதலை’ ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற இந்தக் கூட்டத்தில்,
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக உள்ள பத்திரிகை சுதந்திரத்தைப் பறித்து, மக்களாட்சியின் குரல் வளையை நெரிக்கும் வகையில், 'நக்கீரன்' ஆசிரியர் கைது என்ற சூழ்ச்சி நிறைந்த வெள்ளோட்டம் நீதிமன்றத்தில் பெரு வீழ்ச்சியடைந்துள்ளது. கவர்னர் மாளிகை குறிப்பிட்டபடி 124 இதற்கு எந்த வகையிலும் பொருந்தாது என்று நீதிமன்றம் ஏற்க மறுத்ததன் மூலம், இதற்கான முழுப் பொறுப்பை ஏற்க வேண்டியவரான கவர்னரை டில்லி திரும்ப அழைக்க வேண்டும் என்று இக் கூட்டம் ஒரு மனதாக மத்திய அரசை வற்புறுத்துகிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேற்கண்ட தீர்மானத்தை ஏற்கும் வகையிலும் அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்.