![Public access problem; Police registered a case](http://image.nakkheeran.in/cdn/farfuture/2E2yuf88I2mGg-RDGRjMbwS_Ks46hdhQzBJMpBNX8aI/1690028967/sites/default/files/inline-images/998_127.jpg)
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த கணபதிபாளையம் அருகே உள்ள சாக்கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (63). மனைவி கல்யாணி (53), மகன் தரணிதரன்(30) ஆகியோருடன் வசித்து வருகிறார். பழனிசாமியின் சித்தப்பா மகன் பிரகாஷ் (45). இவரும் அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பழனிசாமிக்கு அந்த ஊரில் சொந்தமாக நிலம் உள்ளது. அந்த நிலத்துக்கு அருகில் பிரகாஷின் நிலம் உள்ளது. இந்த 2 நிலங்களுக்கும் மத்தியில் பொதுவாக பொது வழிப் பாதை உள்ளது. இந்தப் பாதையை இரண்டு பேரும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்தப் பாதையை யார் பயன்படுத்துவது என்பதில் பழனிசாமி- பிரகாஷ் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவில் பிரகாஷின் நண்பர் தட்சிணாமூர்த்தி என்பவரின் வீடு கட்ட லாரியில் மணல் ஏற்றிக் கொண்டு பொது வழிப் பாதையில் கொண்டு சென்றபோது, பழனிசாமி மற்றும் குடும்பத்தினர் லாரியைத் தடுத்து நிறுத்தி இந்த வழியாகச் செல்லக்கூடாது என்று கூறினர். இதனால் இரு தரப்பினருக்கிடையே வாய்த் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் உருட்டுக் கட்டை மற்றும் அரிவாளால் வெட்டத் தொடங்கினர். இதில் பிரகாஷ் அரிவாளால் வெட்டியதில் பழனிசாமிக்கு தலையில் வெட்டு விழுந்தது. இதைப்போல் கல்யாணிக்கு இடது முழங்கைக்குக் கீழ் பலத்த வெட்டு விழுந்தது. தரணிதரனுக்கு தலை மற்றும் இரண்டு கைகளில் வெட்டு விழுந்தது. இதேபோல் பிரகாசுக்கு சிறிது காயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் இது குறித்து மலையம்பாளையம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வெட்டுப்பட்ட பழனிசாமி, அவரது மனைவி கல்யாணி, அவரது மகன் தரணிதரன் ஆகியோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரகாசை பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.