![professors have said they will stage a struggle if they are not given promotion](http://image.nakkheeran.in/cdn/farfuture/0Lh-vVwcyiHiDNeUEtxi85NArV6JpF-eBIwRSAsSLGY/1708428319/sites/default/files/inline-images/Untitled-1-Recovered_157.jpg)
தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்து, திருச்சி உள்ளிட்ட 13 பகுதிகளில் உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு மட்டும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்கப்படுவதாகவும் மற்ற 13 உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றுவோருக்குப் பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக, அனைத்து பேராசிரியர்களுக்கும் இணையான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்க வலியுறுத்தி திருச்சியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில், (தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழகம் ஆசிரியர்கள் கழக திருச்சி கிளை சார்பில்) முதல்வரிடம் கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. சங்கத் தலைவர் பிரபாகரன், செயலாளர் உதயகுமார் தலைமையில் பேராசிரியர்கள் இந்த கோரிக்கைக் கடிதத்தைத் திங்கள்கிழமை வழங்கியுள்ளனர்.
உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்குக் கோரிக்கை கடிதத்தை அனுப்பி வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெறும் என்றும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதேபோல், பட்டுக்கோட்டை, பண்ருட்டி, திருநெல்வேலி, நாகர்கோயில், திருக்குவளை, விழுப்புரம் உள்ளிட்ட 13 உறுப்புக் கல்லூரிகளின் பேராசிரியர்களும் (தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் கழகம் சார்பில் அந்தந்த கல்லூரியின் முதல்வர்களிடம்) கோரிக்கை கடிதங்களை வழங்கியுள்ளதாகப் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.