![Controversial speech by Union Minister piyush goyal about southern states](http://image.nakkheeran.in/cdn/farfuture/jky3oO2ZhR0M1pyS_zbQv1ru0MVs7fBP-SXhmJpnBzQ/1739253911/sites/default/files/inline-images/piyushn.jpg)
மத்திய அரசுக்கு கூடுதலாக வரி தரும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களுக்கு குறைவான நிதியை மட்டுமே மத்திய அரசு கொடுக்கிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து வசூலிக்கும் ஒவ்வொரு ரூபாய் வரிக்கும், மத்திய அரசு வெறும் 26 பைசா மட்டுமே திருப்பி தரப்படுகிறது என்றும், கர்நாடகாவுக்கு 16 பைசா தரப்படுகிறது என்றும் புள்ளிவிவரம் வெளியிடப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, குறைவான வரியை கொடுக்கும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதியை ஒதுக்கும் பாரப்பட்சமும் இருந்து வருகிறது. இதனால் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா போன்ற பா.ஜ.க ஆளாத தென் மாநிலங்கள், மத்திய அரசுக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், கொடுத்த வரிக்கு ஏற்ப நிதி தர வேண்டும் என்று கேட்கும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் குறித்து மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் பா.ஜ.க அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் என்ற அமைப்பும், மற்ற அமைப்பும் சேர்ந்து ராஷ்டிரியா ஏகாத்மதா யாத்ரா 2025 என்ற நிகழ்ச்சியை கடந்த 8ஆம் தேதி நடத்தியது. இந்த நிகழ்ச்சியில், மத்திய வர்த்தகத்துறை அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான பியூஷ் கோயல் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், “கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா போன்ற சில மாநிலங்கள் தங்கள் வரி பங்களிப்புகளைப் போலவே அதிக வரி பகிர்வையும் கேட்கின்றன. இதை விட மோசமான அற்பமான சிந்தனை இருக்க முடியாது, இதை விட மோசமான துரதிர்ஷ்டம் எதுவும் இருக்க முடியாதுமகாராஷ்டிராவில் முந்தைய அரசாங்கத்தின் தலைவர்கள், மும்பை மற்றும் மகாராஷ்டிரா செலுத்திய வரியைக் கணக்கிட்டு, அவ்வளவு தொகையை திருப்பித் தருமாறு கோரிக்கை வைத்தனர். இது பெரும் துரதிர்ஷ்டவசமானது.
மோடி அரசாங்கத்தின் லேசர் கவனம் கடந்த 11 ஆண்டுகளில் வடகிழக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் உள்ளது. நாடு செழிக்க வேண்டுமென்றால், வடகிழக்கு மாநிலங்களும், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் ஜார்கண்ட் போன்ற கிழக்கிந்திய மாநிலங்களும் வளர்ச்சியடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்புகிறார்” என்று பேசினார். மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.