திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள கானூர் கிராமத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த100- க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் முன்னிலையில் தங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நாகை தொகுதியின் மக்களவை உறுப்பினர் எம்.செல்வராஜ் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், "சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் வரவிருக்கிறது. முதலமைச்சர் பல்வேறு அறிவிப்புகளைச் செய்துவருகிறார். விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்துள்ளது வரவேற்கத்தக்கது. விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனப் போராடிய போது ரத்து செய்யவில்லை. உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது உயர்நீதிமன்றம் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய் என உத்தரவிட்டது. அதை ஏற்க மறுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், விவசாயக் கடன் யாருக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது தெரியுமா? பழைய கடன் தள்ளுபடி இல்லை. இந்தாண்டு வாங்கியுள்ள கடன் மட்டும்தான் தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஒத்திவைக்கப்பட்டுள்ள கடன் இன்றைக்கும் வங்கியில் இருந்துகொண்டே தான் இருக்கிறது. பழைய கடன் ரத்தாகாது; புதிய கடன் ரத்து என்பது தனது சொந்தக் கட்சிக்காரர்கள் பயன்பெறுவதற்காக தான் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இன்னும் பல அறிவிப்புகள் செய்யலாம், செய்யக்கூடும். நான்கு ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர்கள், இதையெல்லாம் செய்யாமல் திடீர் திடீரென அறிவிக்கிறார்கள் என்றால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் மக்கள் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என அறிவிக்கிறார். ஆனால் '1100' நம்பருக்கு கால் செய்து பிரச்சனைகளை சொன்னால் உடனே பிரச்சனைகள் தீர்க்கப்படும் என முதல்வர் கூறி வருகிறார். இது எப்படிச் சாத்தியமாகும். ஆட்சியில் இருந்தபோது செய்ய முடியாதவர். இப்ப எப்படிச் செய்வார்.
அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்கள், வருங்காலத்தில் கல்வி கற்க முடியாது என்கிற அளவிற்கு புதிய கல்விக் கொள்கை, நெல் கொள்முதல் நிலையம், நியாய விலைக் கடைகளும் இருக்காது. பொதுத்துறை நிறுவனங்கள் எதிர்காலத்தில் இருக்காது எனத் தெரிந்தும் மத்திய அரசுக்கு இசைபாடும் ஆட்சியாக அ.தி.மு.க. ஆட்சி செயல்படுகிறது" எனக் குற்றம் சாட்டினார்.