Skip to main content

'அந்தப் போலி பிம்பத்தை உறுதிப்படுத்தவே இந்தப் பதிவா?'- பா.ரஞ்சித்திற்கு திமுக சரவணன் கேள்வி

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
'Is this post to confirm that fake image?'- DMK spokesperson asked Pa. Ranjith

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.

இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக பலரும் கருத்துக்கள் மற்றும் கண்டங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில்,' கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் உடலை சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிகழாமல் நல்லடக்கம் செய்து விட்டோம். அண்ணன் இல்லாத, அவருக்குப் பிறகான இந்த வாழ்க்கையை அவர் கொண்ட கொள்கையான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் அரசியலை இன்னும் தீரத்துடனும் உறுதியுடனும் களமாடுவோம். அதுவே ஆம்ஸ்ட்ராங்கிற்கு  நாம் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும். ஜெய்பீம்!

இதனையொட்டி திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும், சமூக வலைத்தள ஊடகங்களில் வன்மத்தை பரப்பிக் கொண்டிருப்பவர்களிடம் சில கேள்விகள்:

1. சென்னை மாநகரில் செம்பியம் காவல் நிலையத்திற்கு மிக அருகாமையிலேயே படுகொலை நடந்திருக்கிறது. இதை வைத்தே தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து கொலையாளிகளுக்கு எத்தகைய பயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். எனவே, சட்ட ஒழுங்கை சீர் செய்ய, இனியும் இப்படி ஒரு சம்பவம் நிகழாமல் இருப்பதற்கு என்ன செயல் திட்டம் உருவாக்க போகிறீர்கள்?

2. படுகொலை செய்ததாக ஒப்புக்கொண்டு சரணடைந்த கயவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆற்காடு சுரேஷின் படுகொலைக்கு பழிவாங்கவே இதை செய்திருப்பதாக காவல் துறையினரும் அறிவித்திருக்கிறார்கள். சரணடைந்தவர்கள் சொல்வதையே வழிமொழிந்து இந்த வழக்கை முடித்துவிடவே காவல்துறையினர் ஆர்வம் காட்டுகிறார்கள். இதை திட்டமிட்டு ஏவியவர்கள் யார்? அவர்களை இயக்கியவர்கள் யார்? இதற்கு வேறு பின்னணி இல்லை என்கிற முடிவுக்கு காவல்துறை வந்து விட்டதா? இதற்குப் பின்னால் ஆருத்ரா இருக்கிறதென்பது குறித்த பார்வையில் காவல்துறையின் நிலைப்பாடென்ன? பல செய்திகளை உலவ அனுமதித்து இதில் எது உண்மை எது பொய் என்று தெரியாத அளவு அலட்சியமாக இருப்பது ஏன்? ஊடகங்களும் இது குறித்து கேள்வி எழுப்ப மறுப்பது ஏன்?

3. சமீப காலமாக தலித் மக்களுக்கும் தலித் தலைவர்களுக்கும் இருக்கும் அச்சுறுத்தலை அரசு எப்போது கவனிக்கப் போகிறது? அவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்யப் போகிறது?, தலைநகரில் தலித் மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய மாபெரும் தலைவரையே மிக சுலபமாக கொல்லக் கூடிய சூழலை இந்த அரசு உருவாக்கி வைத்திருக்கிறது என்றால், தமிழ்நாட்டிலுள்ள மற்ற கிராம நகரங்களை நினைக்கும் போது அச்சம் ஏற்படுகிறது. இந்த பதற்றத்தையும் அச்சுறுத்தலையும் களைய தமிழக அரசிடம் என்ன திட்டங்கள் இருக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

4. பெரம்பூரில் அண்ணனது உடலை அடக்கம் செய்யக்கூடாது என திட்டமிட்டே தடுக்கப்பட்டதாக தெரிகிறது. கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் நிகழ்த்தப்பட்ட நாடகத்தின் முடிவில் விருப்பம் இல்லாமல், சென்னைக்கு வெளியே புறநகர் கிராம பொத்தூர் பகுதியில் அடக்கம் செய்ய நிர்பந்திக்கப்பட்டோம். திமுக அரசிடம் அதிகாரம் இருந்தும், நீதிமன்றத்தை நாடச்செய்து, அதில் சட்ட ஒழுங்கு முறைக்குள் இந்த பகுதி அடங்காது என்று, அவர் வாழ்ந்த பெரம்பூரில் அவர் உடலை அடக்கம் செய்ய விடாமல் மிகப்பெரிய வஞ்சக செயலை செய்து இருக்கிறது இந்த அரசு. உண்மையிலேயே உங்களுக்கு தலித் மக்கள் மீதும், தலித் தலைவர்கள் மீதும் அக்கறை இருக்கிறதா என்கிற கேள்வி எழவே செய்யும்.

5. திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன். அந்த ஆதங்கத்திலேயே இந்த கேள்விகளை முன் வைக்கிறேன். வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா?

6.இந்த படுகொலையையொட்டி எழுந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையை கையாளத் தெரியாமல், மாற்றுக் கதையை வலைத்தளங்களில் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள் வலைத்தள சமூகநீதி காவலர்களும் சில ஊடகங்களும்!. ‘அவரே ஒரு ரவுடி’, ‘ஒரு ரவுடியை கொல்வது எப்படி சட்ட ஒழுங்கு பிரச்சனையாக பார்க்க முடியும்’, ‘கட்டப்பஞ்சாயத்து செய்பவர்’, ‘பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்’ என ஆளாளுக்கு தீர்ப்பு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். கொலை நடந்த நடுக்கம் குறைவதற்கு முன்பே இத்தகைய கருத்துருவாக்ககங்களை பேசுவதற்கு பின்னே இருப்பது யார்? என்ன?' என கேள்வி எழுப்பியுள்ளார்.

nn

இயக்குனர் பா.ரஞ்சித்தின் இந்தக் கேள்விகளுக்கு திமுக தரப்பிலிருந்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர், வழக்கறிஞர் சரவணன் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில் பதிலளித்துள்ளார். அந்தப் பதிவில், 'ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொலை என்ன காரணத்திற்காக நடந்திருக்கிறது? யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே திமுகவின் மீது அபாண்ட குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கிறார் பா.ரஞ்சித் விசாரணை முடிவதற்குள் அதன் போக்கை வெளியில் சொல்லக்கூடாது என்ற அடிப்படையைக் கூட அறியாதவரா பா.ரஞ்சித். ஒடுக்கப்பட்டவர்களின் விடிவெள்ளியாய் செயல்படும் திமுகவின் மீது தலித் மக்களின் நலனுக்கு எதிரானவர்கள் என்ற போலி பிம்பம் இந்தச் சம்பவத்திற்கு பின்னர் பல மடங்கு வீரியத்துடன் சமூக வலைத்தளங்களில் கட்டமைக்கப்படுகிறது. அது தங்களுக்கு தெரியவில்லையா? அந்தப் போலி பிம்பத்தை உறுதிப்படுத்தவே இந்தப் பதிவா? தமிழ்நாட்டின் காவல்துறை சிறப்பான அமைப்பு. இந்த வழக்கில் எல்லா குற்றவாளிகளையும் கண்டறிந்து அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்னிறுத்தி தண்டனை வாங்கித் தரக்கூடிய வல்லமை பெற்றவர்கள். திமுகவை தலித் மக்கள் நலன்களுக்கு எதிரான கட்சி எனக் கட்டமைக்க பாஜகவுக்கு காலமாக முயன்று அதில் படுதோல்வி தான் சந்தித்துக் கொண்டிருக்கிறது, சந்திக்கவும் போகிறது' எனப் பதிவிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்