புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் டிசம்பர் 1ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. டிசம்பர் 11ந்தேதி விடியற்காலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகாதீபமும் ஏற்றப்படும். 2668 அடி உயரம்முள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இதனை காணவும், கிரிவலம் வரவும் சுமார் 15 முதல் 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என மாவட்ட நிர்வாகம் கணக்கிட்டுள்ளது. திருவிழா நடைபெறும் நாட்களில் சராசரியாக 1 லட்சம் பக்தர்கள் காலை, இரவு என இருவேளையும் வருவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
வெளியூர், வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கான வசதிகள் அரசுத்துறை மூலம் என்னன்ன செய்யப்படவுள்ளது என நவம்பர் 14ந்தேதி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன், அரசின் முதன்மை செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளருமான பணீந்தீரரெட்டி ஆகியோர் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இதில் ஒவ்வொரு துறை சார்பில் செய்யபோகும் பணிகள் குறித்து தெரிவித்தனர். அமைச்சர் சில பணிகளில் செய்ய வேண்டியதையும், வேகமாக செய்ய வேண்டியதை குறித்து தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக காவல்துறை சார்பில் ஏ.டி.எஸ்.பி வனிதா காவல்துறை செய்யும் பணிகள் குறித்த தகவல்களை கூறினார். "கோயிலுக்குள் செல்ல அனுமதி அட்டை தரப்படுவது எவ்வளவு நபர்களுக்கு, எவ்வளவு நபர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்பதை விளக்கினார். பரணி தீபத்திற்கு 2 ஆயிரம் பேர், மகாதீபத்திற்கு 4 ஆயிரம் பேர் மட்டும் என பாஸ் வைத்திருப்பவர்களை அனுமதிக்கிறோம். பாஸ் இல்லாத பொதுமக்களையும் அனுமதிக்கிறோம், கோயிலுக்குள் எவ்வளவு பேர் அனுமதிக்க முடியும்மோ அவ்வளவு பேர் தான் அனுமதிக்கிறோம், அதன்பின் பாஸ் வைத்திருந்தாலும் அவர்களை நிறுத்திவிடுகிறோம். இதனால் எங்களுக்கு தான் அவப்பெயர் வருகிறது. அதனால் பாஸ் வைத்திருப்பவர்களை மட்டும் அனுமதிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளோம்" என்றார்.
அறநிலையத்துறை ஆணையர் பணீந்தீரரெட்டி, பாஸ் வைத்திருப்பவர்களை மட்டும் அனுமதிப்பதில் என்ன சிக்கல் என கேட்டவரிடம்," பாஸ் வைத்திருப்பவர்கள் வரிசையில் குடும்பத்தோடு வந்துவிடுகிறார்கள். வெளியே அனுப்ப முடிவதில்லை" என மழுப்பினார் ஏ.டிஎஸ்.பி வனிதா.
ஒரு அனுமதி அட்டைக்கு ஒருவர் தான் என அதிலேயே பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள், ஆட்சியார்கள் தான் ஒரு பாஸ் எடுத்துக்கொண்டு தங்களது குடும்பம், உறவினர்கள், தொண்டர்கள் என ஒரு கும்பலையே அழைத்து வருகிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பாக லைசனிங் ஆபிஸர் என்கிற பெயரில் போலீஸ் அதிகாரிகள் உடன் வருகிறார்கள். இதனால் அந்த கும்பலையே கோயிலுக்குள் அனுமதித்துவிடுகிறார்கள். இதனால் கோயிலுக்குள் நெருக்கடி ஏற்படுகிறது. கோயில் வளாகம் நிரம்பியதும் கோட் மூடிவிடுகிறார்கள். இதனால் பாஸ் வாங்கியவர்களால் உள்ளே செல்ல முடிவதில்லை. இது அந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் தெரியும், ஆனால் அதனை யாரும் சொல்லாமல் மறைத்தனர்.
அதோடு, கோயில் சார்பில் 10 ஆயிரம் பாஸ்கள் தான் அச்சடிக்க வேண்டும் என்றால் 15 ஆயிரம் பாஸ் அச்சடிக்கும் கோயில் அதிகாரிகள், 10 ஆயிரம் மட்டும் கணக்கில் காட்டிவிட்டு, மீதியுள்ள 5 ஆயிரம் பாஸ்களை ஊழியர்கள், புரோக்கர்கள் அதனை வெளியே விற்பனை செய்கின்றனர். இது காவல்துறைக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுப்பதில்லை என்பதே நியாயமான பக்தர்களின் குற்றச்சாட்டு.
காவல்துறை நடவடிக்கை எடுக்காததுக்கு காரணம்?
தீபத்திருவிழாவின் போது ஒரே ஒரு பாஸ் வைத்துக்கொண்டு ஒரு கும்பலையே அரசுத்துறை (அறநிலையத்துறை, வருவாய்த்துறை, நீதித்துறை என சில முக்கிய துறைகள் மட்டும் ) அதிகாரிகளின் குடும்பங்கள் வருகிறார்கள். அதில் காவல்துறை அதிகாரிகளின் குடும்பங்களும் அடக்கம். அப்படி வருபவர்களை பாதுகாப்பில் நிற்கும் காவல்துறை அதிகாரிகள் வேண்டா வெறுப்பாக விதிகளை மீறி உள்ளே அனுமதித்துவிடுகிறார்கள், அனுமதிக்க வைத்துவிடுகிறார்கள் உயர் அதிகாரிகள்.
அதேபோல் கோயிலில் உள்ள சில ஊழியர்களும், சில குருக்கள்களும், தாங்கள் பாஸ் விற்பனை செய்தவர்களை பாதுகாப்புக்கு நிற்கும் அதிகாரிகளை சரிக்கட்டி முதலிலேயே உள்ளே அழைத்து சென்றுவிடுகிறார்கள். இப்படி போட்டி போட்டுக்கொண்டு பாதுகாப்பு விதிகளை மீறுகின்றன.
பாஸ் விவகாரத்தில், கோயில் தரப்பின் தில்லாலங்கடியை வெளிப்படுத்தினால் அறநிலையத்தரப்பில் இருந்து, காவல்துறை மீது குற்றம்சாட்டுவார்கள், இந்த பிரச்சனையை எழுப்பிவிடுவார்கள் என்பதாலயே இரு தரப்பும் விட்டுக்கொடுத்துக்கொண்டுள்ளன என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.