விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியில் இருந்து தென்காசி நோக்கி பைக் ரேசர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் அதிவேகமாக திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள்களை இயக்கிக் கொண்டு வருவதாக தென்காசி மாவட்ட எல்லையான, சிவகிரி போலீசாரிடம் இருந்து தென்காசி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில், தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணி தலைமையிலான போலீசார் தென்காசி அருகே உள்ள குத்துக்கல் வலசை பகுதியில் காத்துக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது, அதிவேகமாக ஆம்புலன்ஸ் ஒன்று திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த நிலையில், அதனை மறித்த போக்குவரத்து போலீசார் தொடர்ந்து, ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை மறித்து விசாரணை நடத்திய போது அதில் வந்த 10 இளைஞர்கள் அனைவரும் சிவகாசி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் குற்றாலத்திற்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு, முன்னதாக சிவகாசியில் இருந்து குற்றாலத்திற்கு மோட்டார் சைக்கிள் ரேஸ் செல்லலாம் என திட்டமிட்டுள்ளனர். அப்பொழுது, திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையானது வாகன நெரிசல் மிகுந்த சாலை என்பதால் ரேஸ் செல்வது கடினம் என யோசித்த அந்த சில்லுவண்டுகள் விபரீதமாக திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, ஒரு தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி குற்றாலம் செல்ல வேண்டும் என ஆம்புலன்ஸ் டிரைவரிடம் சொல்லியும், ஆம்புலன்சை சைரன் போட்டவாறு சிவகாசியில் இருந்து குற்றாலம் நோக்கி செல்ல வைத்து, அதன் பின்னால் இளைஞர்களான சில்லுவண்டுகள் அனைவரும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து சிவகிரி போலீசார் உடனே சம்பவம் குறித்து தென்காசி போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், கொத்தாக தென்காசி போக்குவரத்து போலீசார் அந்த சில்லுவண்டுகள் அனைவரையும் மடக்கி அவர்கள் ஓட்டி வந்த வாகனங்கள் மற்றும் ஆம்புலன்சை பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், மோட்டார் சைக்கிள் ரேஸ் செல்ல திட்டமிட்ட இளைஞர்கள் சட்டவிரோதமாக, அவசர சிகிச்சைக்காக பயன்படுத்தக்கூடிய ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபட்ட இளைஞர்கள், போலீசாரிடம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்துள்ளது.