Skip to main content

'எத்தனை முறை கேட்டாலும் இதுதான் பதில்'-ஆர்.பி.உதயகுமார் பேட்டி

Published on 15/02/2025 | Edited on 15/02/2025

 

 'No matter how many times I ask, this is the answer' - R.P. Udayakumar interview

'அதிமுகவில் இணைய வேண்டும் என்றால் ஓபிஎஸ் சிறிது காலம் அமைதியாக இருக்க வேண்டும்' என அதிமுகவின் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ள நிலையில் ராஜன் செல்லப்பாவின் கருத்து குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.

திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா நேற்று  செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''நீங்கள் (ஓபிஎஸ்) அதிமுகவிற்கு இடையூறு பண்ணாதீர்கள். உண்மையிலேயே அதிமுகவில் இணைய வேண்டும் என ஓபிஎஸ் நினைத்தால் ரகசியமாகச் சொல்லிவிடுங்கள். வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என அவசியம் கிடையாது. ஓபிஎஸ் மக்களிடம், பேப்பரில் ஏன் சொல்ல வேண்டும். எத்தனை தடவை அமைச்சர்கள் போய் பேசி அன்றைக்கு நாம் ஒன்றிணைந்தோம். வந்து சேர்ந்தீர்கள். உங்களுக்கு உரிய முக்கியத்துவம் கிடைத்தது. துணை முதலமைச்சர் பதவி கொடுத்தோம். ஒருங்கிணைப்பாளர் ஆனீர்கள். அதேபோல் தனியாக சொல்லி விடுங்க. பொதுவாழ்வில் எனக்கு கஷ்டமாக போய்விட்டது. அதிமுக தொண்டர்களை காப்பாற்றுகிறேன் என பத்திரிகையில் செய்தி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

அவர் உண்மையிலேயே அதிமுகவில்  சேர வேண்டும், அதிமுக வெற்றிபெற வேண்டும், அதிமுகவை காக்க வேண்டும் என்றால் எடப்பாடி தலைமையை ஏற்றுக் கொள்வதை அவர் சொல்லிவிட வேண்டும். பேப்பரில் செய்தி கொடுத்து தர்மம் வெல்லும்; சூது வெல்லும்; இது வெல்லும்; அது வெல்லும் என்று விமர்சனம் செய்து கொண்டே இருக்கிறார். அதிமுக வளர வேண்டும் என நினைத்தால் வழக்கு மன்றத்திற்கு போகவே கூடாது. ஆறு மாதம் பொறுமையாக இருங்கள். எங்களைப் போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் எடப்பாடி பழனிசாமியிடம் போய் கேட்டு, 'நல்லா இருக்கிறார் சேர்த்துக்கொள்வோம்' என்று கேட்கிறோம். இதுதான் எங்களால் செய்ய முடிந்த நன்மை. துணிச்சலாக சொல்கிறோம்'' என தெரிவித்திருந்தார்.

 'No matter how many times I ask, this is the answer' - R.P. Udayakumar interview

இந்நிலையில் மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜு ஆகியோர் பேரணியாக நடந்து சென்று திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.பி.உதயகுமாரிடம் ராஜன் செல்லப்பாவின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''இப்பொழுது நாங்கள் திண்ணைப் பிரச்சாரத்திற்காக வந்திருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. இந்த கேள்விக்கெல்லாம் காலையிலேயே பதில் சொல்லிவிட்டார்கள். எத்தனை முறை கேட்டாலும், நீங்கள் கேள்வி கேட்டாலும் அவர் சொன்னது தான் பதில்'' என்றார்.

சார்ந்த செய்திகள்