Skip to main content
Breaking News
Breaking

“மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்ப வேண்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 15/02/2025 | Edited on 15/02/2025

 

CM MK Stalin says Peace should return to Manipur soon

உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் சமூக வலைத்தளங்கள் வாயிலாகக் கேள்விகளுக்குக் காணொளி வாயிலாகப் பதிலளித்து வருகிறார். அந்த வகையில் இன்று (15.02.2025) அப்பா எனும் பொறுப்பு, அற்ப சிந்தனை என்று சொல்லும் மத்திய ஆட்சியாளர்களுக்கு மனசாட்சி இருக்கிறதா?, கல்விக்காக நிறையச் செய்ய வேண்டும், கூட்டணிக் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடா?, டப்பிங் வாய்ஸ் பழனிசாமி, பாலியல் குற்றங்கள், உணவு மற்றும் உடற்தகுதி, வெளி மாவட்டப் பயணங்கள் மற்றும் பற்றி எரிந்த மணிப்பூர் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.

அதன் ஒரு பகுதியாக சோஷியல் மீடியா எல்லாம் பார்ப்பீர்களா? என்ற கேள்விக்கு, “ஓய்வு நேரங்களில் பார்ப்பதுண்டு. செய்திகளைவிட மக்களின்‘கமெண்ட்ஸ்’ என்ன என்று பார்ப்பேன். தீயவற்றை விலக்கி விட்டு நல்லதை எடுத்துக் கொள்வேன். யாராவது கோரிக்கை வைத்திருந்தால், அது நியாயமான கோரிக்கையாக இருந்தால்அதைத் தீர்த்து வைக்கச் சொல்லி சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அனுப்பி வைப்பேன். பொதுவாக, சோஷியல் மீடியாக்களில் நிறைய உணவுசம்பந்தப்பட்ட வீடியோக்கள் வருகின்றன. நிறைய பேர் ஹோட்டல்களுக்குச் சென்று, ‘ஃபுட் ரிவ்யூ’ போடுகிறார்கள். இளம்தலைமுறையினர், ஃபுட்க்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்றே ஃபிட்னசுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” எனப் பேசினார்.

வெளி மாவட்டப் பயணங்களுக்குச் செல்லும்போது கிடைக்கும் அனுபவங்களைப் பற்றி சொல்ல முடியுமா? என்ற கேள்விக்கு, “அரசு நிகழ்ச்சிகளிலும், கட்சி நிகழ்ச்சிகளிலும் மட்டும் கலந்துகொண்டோமா என்று இந்தப் பயணங்கள் இல்லை. எந்த மாவட்டத்திற்குச் சென்றாலும், அந்தப் பகுதியில் இருக்கும்பொதுமக்கள், வணிகர்கள், மாணவர்கள் என்று அனைவரையும்சந்தித்துப் பேசுகிறேன். என்னைச் சந்திக்கும்போது, மக்களின் முகத்தில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் பார்க்கிறேன். ஒவ்வொருவரும் என்னிடம் உரிமையோடு பேசுகிறார்கள். ‘மக்களுக்கான அரசாக உங்கள் அரசு இருக்கிறது’ என்று சொல்கிறார்கள்.

நம்முடைய குறைகள் தீர்க்கப்படும் என்று நம்பிக்கையுடன் மனுக்களைக் கொடுக்கிறார்கள். கூடுமானவரைக்கும் அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காண்கிறோம். அந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை என்றால், ஏன் அதை செய்ய முடியவில்லை என்றும் அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். அதேபோன்று அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளையும், தேவைகளையும் செய்து கொடுக்கிறோம். மொத்தத்தில், இந்த வெளி மாவட்டப் பயணங்கள் எனக்கு மனநிறைவாக இருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், புதிய எனர்ஜியைத் தருகிறது” எனப் பேசினார்.

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியைஅறிவித்திருக்கிறார்களே? என்ற கேள்விக்கு, “மிகவும் காலதாமதமான முடிவு இது. அந்த மாநில முதலமைச்சர் பிரேன் சிங் அவராகப் பதவி விலகவில்லை. வேறு வழியில்லாமல் பதவி விலகியிருக்கிறார். இரண்டு ஆண்டுகாலமாக மணிப்பூர் பற்றி எரிந்தது. 220 பேருக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியிருக்கிறார்கள். மாநிலத்தின் முதலமைச்சர் மேல் நடவடிக்கை எடுக்காமல் மத்திய பா.ஜ.க. அரசு பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்தார்கள். நடந்த வன்முறையின் பின்னணியில் மாநில முதலமைச்சரே சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்று, இப்போது அவர் பேசிய ஆடியோ வெளியாகி இருக்கிறது. அதைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டிருக்கிறது.

கூட்டணிக் கட்சியும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுமே அவருக்கு எதிராகத் திரும்பிவிட்டார்கள். இந்த நிலையில்தான் வேறு வழியில்லாமல் அவரை ராஜினாமா செய்ய வைத்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி இருக்கிறார்கள். பா.ஜக. ஆளும் மணிப்பூராக இருந்தாலும், உத்தர பிரதேசமாக இருந்தாலும் இந்த அளவில்தான் சட்டம் ஒழுங்கு நிலைமை இருக்கிறது. இந்த இலட்சணத்தில் இவர்கள் அடுத்த மாநிலத்தை பற்றிக் கூச்சமில்லாமல் பேசுகிறார்கள். நம்மை பொருத்தவரை, மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்ப வேண்டும், மக்களைக் காக்கும், மக்கள் விரும்பும் மக்களாட்சி அமைய வேண்டும்” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்