ஒரு சாலை எப்படிப் போடக் கூடாது என்பதற்கு புதுக்கோட்டை மாவட்டமே சான்றாக அமைந்துள்ளது.
கடந்த மாதம் அறந்தாங்கி - மீமிசல் சாலையில் இருந்த பணிக்கன் வயல் வழியாக கோங்குடி செல்லும் சாலையில் 3.840 கி.மீ. தூரத்திற்கு சாலை ரூ. 1.45 கோடிகளை மத்திய ஊராக வளர்ச்சி அமைச்சகம் நிதி ஒதுக்கியது. அந்த நிதியை புதுக்கோட்டை மாவட்ட ஊராக வளர்ச்சி முகமை பாக்குடி கணபதி என்பரிடம் ஒப்பந்தம் கொடுத்து அதை கண்காணிக்க பணிப்பு பொறுப்பு அலவலராக உதவிப் பொறியாளர் வேல்முருகனையும் நியமித்தார்கள்.
இடையில் 2 சிறு பாலங்களும், 7 தடுப்பு சுவர்களும் அமைக்கப்பட்டு சாலைப் பணியும் முடிவடைந்தது. பணிப் பொறுப்பு அதிகாரியும் தரமான சாலை என்று சான்று கொடுத்துவிட்டார். ஆனால் ஒரு மாதத்திற்குள் ஆங்காங்கே உடைந்து நொறுங்கியது. இது சம்மந்தமாக மே 3 ந் தேதி ஒரே மாதத்தில் பல்லைக்காட்டும் ஒன்றரைக் கோடி சாலை என்ற தலைப்பில் நக்கீரன் இணையத்தில் விரிவான செய்தி வெளியிட்டாம். அடுத்த நாளே உடைந்த இடங்களில் மீண்டும் பஞ்சர் ஒட்டி சரி செய்துவிட்டார்கள். அதிகாரிகளின் அலட்சியத்தால் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சாலையும் இப்படித் தான் தரமற்று போடப்படுகிறது என்பதற்கு அடுத்தடுத்த சான்றுகளை இளைஞர்கள் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவுகளாக வெளியிடுகிறார்கள்.
அதேபோல கடந்த வாரம் பொன்னமராவதி அருகே செவலூர் விலக்கு சாலையில் மணலையும் மண்ணை மட்டுமே கலந்து கட்டிய பாலம் கை விரல் வைத்தால் உடைந்து கொட்டுவதை பட ஆதாரங்களுடன் வெளியிட்டோம். இந்த நிலையில் தான் தற்போது ரூ. 3.13 கோடியில் அமைக்கப்பட்ட 5.10 கிமீ சாலை ஒரே நாளில் தோசைக் கல்லில் வெந்த ரோஸ்ட் தோசை போல மக்கள் சுருட்டி அள்ளும் அளவிற்கு உள்ளது. பொன்னமராவதி அருகில் உள்ள எம்.உசிலம்பட்டியிலிருந்து காயாம்பட்டி வழியாக ஒலியமங்கலம் செல்லும் சாலை பாரதப் பிரதமர் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ. 312.53 லட்சம் மதிப்பீட்டில் புதுக்கோட்டை மாவட்ட ஊராக வளர்ச்சி முகமை செயல்படுத்தும் விதமாக சோத்துப்பாளை முருகேசன் என்ற ஒப்பந்தக்காரரிம் பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளை செயல்படுத்தும் அதிகாரியாக பொன்னமராவதி ஒன்றியம் பாலமுரளியும் நியமிக்கப்பட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பணிகள் தொடங்கியது. கிராம மக்கள் சந்தோசமாக இருந்தனர். நம்ம ஊருக்கும் நல்ல ரோடு வரப்போகிறது என்று.. ஆனால் சில நாட்களுக்கு முன்பு பணிகள் முடிக்கப்பட்டு ஆங்காங்கே விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சாலை தரமில்லை என்று இளைஞர்கள் சொல்ல சிலர் சாலையை கைகளால் தோண்ட தோண்ட அப்படியே கற்கள் சிதறளாக பெயர்ந்து வந்தது. தார் கலவையே இல்லாமல் போடப்பட்ட சாலையாக இருந்தது.
இப்படி ஒரு தரமற்ற சாலை போட மாவட்ட அதிகாரிகள் தொடர்ந்து அனுமதி அளித்து வருகின்றனர்.
இது குறித்து ஒலியமங்கலம் பகுதி இளைஞர்கள் சாலையில் மோசமான தரத்தை தோண்டிக் காட்டி வீடியோ வெளியிட்டனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்களின் சிலர்.. 10, 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் கிராம சாலைகள் தார்சாலைகளாக மாற்றப்படுகிறது. அதன் பிறகு பராமரிக்கவும் 10 வருசத்துக்கு மேல ஆகும். மத்திய அரசு நிதி கொடுப்பதை இங்குள்ள அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், ஒப்பந்தக்காரர்களும் பங்குபோட்டு எடுத்துக் கொண்டு மக்களுக்கு போட்ட சாலையை பாருங்கள் கையால தோண்டினால் அள்ளும் அளவில் உள்ளது. இதை மாவட்ட அதிகாரிகளும் கண்டுக்கல. ஆளுங்கட்சி பிரமுகர்களின் தார் கலவை தான் கொண்டு வந்து போட்டாங்க. வேலை செஞ்சவர்களிடம் கேட்டால்.. நாங்க என்ன செய்றது மூன்றேகால் கோடியில 2 கோடி வரை கமிசனா போயிடும். அப்பறம் ரோடு இப்படித் தான் போட முடியும் என்கிறார்கள். இந்த சாலைக்காண ஒப்பந்த பணத்தை அரசு நிறுத்த வேண்டும். இல்லை என்றால் மக்கள் திரண்டு போராடுவோம் என்றனர்.
மத்திய – மாநில அரசுகள் இணக்கமாக இருந்தாலும் மத்திய அரசு நிதியை வாங்கி இப்படியா ஏப்பம் விடுவது. மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்காக போடப்படும் சாலையை கூட இப்படியா மோசமாக போடுவது. சொந்த மக்களை வஞ்சித்து அவர்களின் பணத்தை சாப்பிடும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதே நேரத்தில் மக்கள் வயிறு எரிஞ்சு ஏசுவதை அந்த அதிகாரிகள் ஒரு நாள் உணருவார்கள். அப்போது மன்னிப்பு கேட்பதைவிட இப்போதே தரமான பணிகளை செய்ய உதவலாமே..