சிலைகளைக் கடத்தி விற்பனை செய்யும் கும்பலிடம், சிலையை விலைக்கு வாங்குவதுபோல பேரம் பேசி அந்தச் சிலையைக் கொண்டு வரச்செய்து சிலையையும், சிலையை எடுத்து வந்த காரையும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
அந்தச் சிலையைக் கொண்டு வந்த கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த சிவ பிரசாத் நம்பூதிரி என்பவரையும் அவரது கார் ஓட்டுநர் ஜெயந்த் என்பவரையும் பிடித்துச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கும்பல் அந்தச் சிலைக்கு ரூ.10 கோடி கேட்டதாகவும், காவல்துறையினர் ரூ.8 கோடி தருவதாகவும் பேரம் பேசி சிலையைக் கொண்டு வரச் செய்தனர். கோவை பல்லடம் சாலையில் இருகூர் பிரிவு ரோட்டில் காரை மடக்கிப் பிடித்து சிலையைக் கைப்பற்றினோம் எனச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு திருச்சி சரக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட திருவாச்சியுடன் கூடிய நடராஜர் சிலை உலோகத்திலானது. அந்தச் சிலை எந்தக் கோவிலுக்குச் சொந்தமானது? அது எந்தக் காலத்தில் வடிவமைக்கப்பட்டது? அந்தச் சிலையின் மீது ஏதேனும் வழக்குகள் எதுவும் நிலுவையில் உள்ளனவா? என்பது குறித்துத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.