அண்மையில் கேரளாவில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் உட்பட இருவர் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இதேபோல் திருவண்ணாமலையில் வீட்டை பூட்டிக் கொண்டு மாந்திரீகம் சிலர் செய்ததாகவும், நரபலி கொடுப்பதாகவும் வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கச்சராபேட்டை கிராமத்தில் வசித்து வந்த தவமணி-காமாட்சி தம்பதியினருக்கு பூவரசன், பாலாஜி என்று இரண்டு மகன்களும், கோமதி என்ற ஒரு மகளும் இருந்தனர். கோமதிக்கும் அரியபாடி கிராமத்தைச் சேர்ந்த மின்சார பகிர்மான கழகத்தில் பணியாற்றும் பிரகாஷ் என்பவருக்கும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோமதிக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பேய் பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பல்வேறு கோவிலுக்கு சென்று பேய் ஓட்டுவதாக கூறி சித்திரவதைப்படுத்தி உள்ளனர்.
அதனை தொடர்ந்து மருமகன் பிரகாசுக்கும் பேய் பிடித்ததாக நம்பிய கோமதியின் பெற்றோர்கள் மகள் கோமதி, மருமகன் பிரகாஷ் ஆகியோரை வீட்டிலேயே அடைத்து வைத்துள்ளனர். தொடர்ந்து மகளையும் மருமகனையும் வெளியே அனுப்பாமல் தொடர்ந்து பூட்டி உள்ளேயே பூஜை மாந்திரீகம் என பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் நரபலி கொடுப்பதாக தகவல் வெளியான நிலையில், கிராம மக்கள் மற்றும் பிரகாஷின் உறவினர்கள் கதவை தட்டியுள்ளனர்.
ஆனால் கதவு திறக்காததால் அதிர்ந்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்தும் கதவை திறக்காததால் ஜேசிபி வைத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த ஆறு பேரையும் மீட்டனர். பேய் பிடித்ததாக நம்பி அடைத்துவைக்கப்பட்ட இரண்டு பேரையும் ஆரணி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.