திண்டுக்கல் மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி, நெசவாளர் கூட்டுறவு சங்கம், வீடு கட்டும் கூட்டுறவு சங்கம், நகர கூட்டுறவு சங்கம், அபிராமி கூட்டுறவு சங்கம், கூட்டுறவு பயிற்சி நிலையம், வேளாண் விளைபொருள் கூட்டுறவு சங்கம், மகளிர் கூட்டுறவு சங்கம் என மாவட்டத்தில் மொத்தம் 650 சங்கங்கள் வரை செயல்பட்டு வருகிறது.
இந்த சங்கங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் மாவட்ட அளவில் கூட்டுறவு ஒன்றியமும் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு ஒன்றிய நிர்வாக குழுக்கான தேர்தல் கடந்த 12ம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகன் ராஜ்மோகன் கூட்டுறவு ஒன்றிய நிர்வாக குழு தலைவராகவும், துணை தலைவராக சோனாசுருளியும், நிர்வாககுழு உறுப்பினர்களாக 18 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை தவிர வேறு யாரும் வேட்பு மனுவை தாக்கல் செய்யாத நிலையில் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக பதவியேற்கும் நிகழ்வு நேற்று நடைப்பெற்றது. இதில் புதியதாக தேர்நதெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியேற்று கொண்டனர். மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவராக அமைச்சர் சீனிவாசன் மகன் ராஜ்மோகனுக்கு தேர்தல் அதிகாரி அன்புக்கரசன் பதவிபிரமாணம் செய்து வைத்து சான்றிதழ் வழங்கினார்.
பதவியேற்பு விழாவில் அர்பன் பேங்க் தலைவர் பிரேம், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், முன்னாள் ஆவின் தலைவர் திவான் பாட்சா, ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளும் பெரும் திரளாக கலந்து கொண்டு ஒன்றிய தலைவர் ராஜ்மோனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.