தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கும் மத்திய அரசு விதிமுறைகள்படி ரூ. 45 ஆயிரம் வரை சம்பளம் வழங்க வேண்டும் என்றாலும் தமிழக அரசு ரூ. 15 ஆயிரம் வரை மட்டுமே சம்பளம் வழங்கி வருகிறது. இப்போது அவர்களுக்கு அந்த சம்பளத்தையும் கொடுக்காமல் மே, ஜூன் மாதங்களுக்கு சம்பளம் வரவில்லை என்றால் அதை கேட்கமாட்டோம் என்று கௌரவவிரிவுரையாளர்களிடம் கல்லூரி நிர்வாகம் எழுதிவாங்குவது தான் கொடுமையின் உச்சம்.
புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் (தன்னாட்சி) பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களிடம் அந்தந்த துறை தலைவர்கள் ஒரு துண்டு படிவத்தை கொடுத்து கையெழுத்து பெற்றனர். அந்த படிவத்தில்.. ஜூன் 2019 மாதத்திற்குறிய ஊதியம் கல்லூரி கல்வி இயக்ககம் வழங்காவிட்டால் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்க மாட்டேன் என உறுதி கூறுகிறேன்.
அரசு உரிய கல்வித்தகுதி இல்லை என்று காரணம் காட்டி என்னை பணியிலிருந்து நீக்கப்படும் வேளையில் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்க மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன். இவ்வாறு அச்சடிக்கப்பட்டுள்ள படிவத்தில் துறை தலைவர் வழியாக முதல்வர் மா.மன்னர் கல்லூரி பெற்றுள்ளது.
அதேபோல அறந்தாங்கியில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. சுமார் 50 விரிவுரையாளர்கள் கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த கல்லூரியையும் ஏப்ரல் முதல் அரசு எடுத்துக் கொண்டதால் அதன் பிறகு மே, ஜூன் மாதங்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. மேலும் இங்கு பணிசெய்யும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ. 12 ஆயிரம்தான் ஊதியமாக கிடைக்கிறது.
இந்நிலையில் இந்த கல்லூரியில் பணியாற்றும் அனைத்து கௌரவ விரிவுரையாளர்களுக்கும் 2 மாதம் ஊதியம் இல்லை என்ற நிலையில் மேலே உள்ளது போன்ற படிவத்தை புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரி நிர்வாகம் எழுதி வாங்கி வருகிறது.
இது குறித்து சில கௌரவவரிவுரையாளர்கள் கூறும் போது.. இத்தனை மாதங்கள் வேலை பார்த்துக்கு சம்பளம் கொடுக்காமல் இப்போது சம்பளம் வரவில்லை என்றால் கேட்கமாட்டேன் என்று எழுதி வாங்குவது வேதனையாக உள்ளது. எங்களுக்கும் குடும்பங்கள் உள்ளது. எப்படி சமாளிக்க முடியும். அதேபோல எப்போது வெளியேறச் சொன்னாலும் வெளியேற வேண்டும் என்றும் எழுதி வாங்குகிறார்கள். இதை சிலர் எதிர்த்து வழக்கு போட்டதால் நீதிமன்றங்களில் இந்த பேப்பர்களை காட்டி எங்களுக்கு எதிராக திசைதிருப்பிவிடும் முயற்சியாக பார்க்கிறோம் என்றனர். ஒரு அரசாங்கம் தன் ஊழியரை சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றலாமா?.