இறுதிவரை தமிழ் தேசியவாதியாகவும், நாத்திகனாகவும் வாழ்ந்து தமிழ்ப்பணியற்றிய தமிழ் தேசியப் பேராசிரியர் இன்று தமிழ்ப் பணியை நிறைவு செய்து கொண்டுள்ளது ஈழத்து தமிழ் மக்களுக்கும், புலம் பெயர் தமிழ் மக்களுக்கும் சொல்லெணாத் துயரத்தை தந்துள்ளது.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியில் 1964முதல் 1996 வரை பேராசிரியராக பணியாற்றி ஓய்வுப்பெற்றவரும், கடையம் வஉசி தெருவில் வசித்து தமிழ்ப் பணியாற்றியவருமான பேராசிரியர் அறிவரசன் என்ற மு.செ.குமாரசாமி வயதின் மூப்பின் காரணமாக புதன்கிழமையன்று மறைந்தார். விடுதலை நாளேட்டின் துணையாசிரியராக பணியாற்றிய இவர் "தமிழர் தாயகம் "சிற்றிதழையும் மறையும் வரை நிறுவன ஆசிரியராக நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. பெரியார் பெருந்தொண்டரான இவர் சிறந்த தமிழ்ப்ற்றாளரும் கூட.!! இதனை அடிப்படையாகக் கொண்டு 2006ம் ஆண்டு மதிவதினிக்கும், ஈழத்திலுள்ள ஆசிரியர்களுக்கும் தமிழ் கற்றுக் கொடுக்க தமிழ்தேசியப் போராளி பிரபாகரனிடமிருந்து நேரடியாக அழைப்பு வர, அவ்வழைப்பினை ஏற்றுக்கொண்டு 2006ம் வருடம் மார்ச் மாதம் இலங்கை சென்றார். மதிவதினி உள்ளிட்ட 25 பெண்கள் உட்பட 40 நபர்களுக்கு செஞ்சோலை எனுமிடத்தில் தமிழ் கற்பித்தார். சுமார் 2 வருட காலம் ஈழத்தமிழர்களுக்காக தமிழ் கற்பித்தவர் 2008ம் ஆண்டு மீண்டும் தமிழ்நாடு திரும்பினார்.
அத்துடன் இல்லாமல் புலம்பெயர் தமிழர்கள் அதிகம் வாழும் பிரான்ஸிற்கு சென்று புலம் பெயர் தமிழர்களின் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட தமிழ் பள்ளிகளுக்கும் பாடத்திட்டம் வகுத்துக் கொடுத்து தமிழாசிரியர் பயிற்சியும் அளித்தது குறிப்பிடத்தக்கது. தென்மாவட்டங்களில் திராவிட- தமிழ்தேசிய இயக்கங்களின் மிக முக்கிய அறிவு ஆளுமையாகவும் விளங்கிய இவர் தனது 80 வயதில் இன்று மாலை (4-3-2020) கடையத்தில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். இவரது உடல் நாளை நெல்லை அரசு மருத்துவ மனைக்கு கொடையாக வழங்கப்பட உள்ளது.