மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா ஜூன் 3 அன்று தொடங்குகிறது. எளிய பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்து; அயராத உழைப்பால் துடிப்பான செயல்பாடுகளால் 60 ஆண்டுக் காலத்திற்கும் மேலாக தமிழக அரசியலில் ஆளுமையை செலுத்தியவர். ஐந்து முறை முதலமைச்சராக இருந்து முக்கிய நிகழ்வுகளில் இந்திய அரசியலை தன் பக்கம் திருப்பிய அவரது ஆளுமை வியப்புக்குரியது. எழுத்து, பேச்சு, கள செயல்பாடு, நிர்வாகம், இலக்கியம், அரசியல், ஆரோக்கியம் பேணுதல் என அவரது பன்முக ஆளுமை பலருக்கும் முன்மாதிரியானவை. அவரது நூற்றாண்டு விழாவை தமிழக அரசு ஓராண்டு காலம் கொண்டாடவிருப்பது அவருக்கு செய்யும் உயரிய மரியாதையாகும்.
இந்நிலையில் அதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் மனிதாபிமானம் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளையும் அவற்றில் இணைத்திட வேண்டும் என்பது எமது விருப்பமாகும். குறிப்பாக தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளை கடந்து நீண்ட காலம் ஆயுள் சிறைவாசிகளாக வாடுபவர்களை; சாதி-மத-வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக தமிழக அரசு அமைத்த நீதியரசர் ஆதிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை விரைந்து கேட்டுப் பெற வேண்டும். மேலும், அரசியல் சாசன சட்டம் மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ள 161-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி தமிழக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்ற வேண்டும்.
ஏற்கனவே, பேரறிவாளன் உள்ளிட்டோரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கும் நிலையில், சட்டப்படி நிகழ வேண்டிய ஒரு மனிதாபிமான செயலை முறைப்படி செய்திட தமிழக அரசு தயங்க வேண்டியதில்லை. இது போன்றதொரு சட்டத்திற்கு உட்பட்ட மனிதாபிமான நடவடிக்கை என்பது கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கு மேலும் புகழ் சேர்க்கும். எமது நீண்ட கால இக்கோரிக்கை என்பது, தமிழகத்திலுள்ள பெரும்பாலான ஜனநாயக சக்திகளின் குரலாகும். இதற்கு பொதுமக்கள் ஆதரவு பெருகி வருகிறது என்பதை அரசு உணர்ந்திருக்கும் நிலையில், இதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்தில் கொள்ள வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்" என தெரிவித்துள்ளார்.