வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், இந்த ஆண்டு வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்யப்படும். வேளாண்மை பயிர்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி தண்ணீர் பற்றாக்குறையை போக்க, பாலாற்றில் 4 தடுப்பணைகள் மற்றும் பொன்னையாற்றில் ரூ. 47 கோடி மதிப்பீட்டில் 4 தடுப்பணைகளும் கட்டப்பட்டு வருகிறது. வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தற்போது அரவை துவங்கியுள்ளது. இந்த ஆலையில் என்னென்ன தேவைகள் உள்ளது என்பதை ஆலை நிர்வாகம் பட்டியல் தயாரித்து தம்மிடம் வழங்கினால் அதனை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “சென்னையை சுற்றி நீர் நிலைகளை உருவாக்கத் தமிழக அரசு நீண்ட காலமாக ஆலோசித்து வந்த நிலையில், ராமனஞ்சேரியில் மிகப்பெரிய தடுப்பணை கட்ட ஆலோசனை செய்யப்பட்டது. ஆனால் அங்குள்ள மக்கள் போதிய அளவு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. மற்றொரு இடம் திருக்கழுக்குன்றம். ஏரியில் கடந்த ஆட்சியாளர்கள் தடுப்பணைகள் கட்ட முயற்சி செய்தார்கள்; ஆனால் முடியவில்லை. எனவே சென்னையைச் சுற்றி உள்ள பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் ஒரு அடி கொள்ளளவுக்கு நீர் மட்டத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அறிக்கை அளித்த பின்பு அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சென்னையைச் சுற்றி நீர் நிலைகளை ஆக்கிரமித்துள்ள பகுதிகள் அதிக அளவில் அகற்றப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றும் பட்சத்தில் அரசியல் தலையீடும் உள்ளது. பாராளுமன்றத்தில் எந்த அளவுக்கு துணிந்து இருந்தால் வாலிபர்கள் கீழே குதித்து புகை குண்டு வீசி இருப்பார்கள். இச்செயல் கண்டிக்கத்தக்க செயல்.” நிவாரண நிதி 6000 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளது எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்தான் முடிவு எடுப்பார்” எனக் கூறினார்.