அரியலூர் மாவட்டம், ஆலத்தியூர் பகுதியில் தனியார் சிமெண்ட் ஆலைகள் இயங்கிவருகின்றன. இந்த ஆலைகளில் தயாராகும் சிமெண்ட் மூட்டைகளை வெளியே கொண்டு செல்லவும், ஆலைக்குத் தேவையான மூலப்பொருட்களை கொண்டுவரவும் தினசரி ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகள் சென்று வருகின்றன. இந்த லாரிகள் அனைத்தும் கடலூர் மாவட்டம், ராமநத்தம் அருகே செல்லும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து செல்கின்றன.
அதன்படி நேற்று (15.11.2021) நள்ளிரவு விருத்தாசலம் ராமநத்தம் நெடுஞ்சாலையில் திட்டக்குடி அருகே சென்றுகொண்டிருந்த சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான லாரி, மணல்மேடு எனும் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள வீடுகள் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சாலையோர மரங்களை இடித்துத் தள்ளிவிட்ட பிறகு சரக்கு லாரி வீடுகள் மீது விழுந்ததால், அதிர்ஷ்டவசமாக அந்த வீடுகளில் இருந்த 15க்கும் மேற்பட்டவர்கள் உயிர்தப்பினர். அதேசமயம், வீடுகள் மோசமாக சேதமடைந்துள்ளன. இந்த விபத்தினால் அப்பகுதியில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரியை ஓட்டிவந்த ஓட்டுநர் விபத்து நடந்தவுடன் தப்பிவிட்டார். குடியிருப்பு வீடுகள் மீது சரக்கு லாரி கவிழ்ந்த சம்பவம் திட்டக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.