'கரோனாவிற்கு எதிரான ஒரே ஆயுதம் தடுப்பூசியே' என்பதன் அடிப்படையில் தமிழகத்தில் வாரந்தோறும் மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் தமிழக சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இனி வார இறுதியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட மாட்டாது என அறிவித்துள்ள சுகாதாரத்துறை, தேவைப்பட்டால் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் முகாம்களை நடத்திக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
இதுவரை தமிழகத்தில் 27 முறை சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளது. இதுவரை தமிழகத்தில் 92 சதவிகிதத்தினர் முதல் தவணை கரோனா தடுப்பூசியும், 73 சதவிகிதத்தினர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் எடுத்துக்கொண்டுள்ளனர். தமிழக அரசால் கரோனாவை கட்டுப்படுத்த நடத்தப்பட்ட இந்த முகாம்கள் மூலமாக சுமார் 4 கோடி பேர் பயனடைந்துள்ளனர் என்ற தகவலையும் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.