Skip to main content

ஈமப் பெருங்கற்கால சின்னங்களை சேதப்படுத்தும் புதையல் திருடர்கள்!  

Published on 09/01/2025 | Edited on 09/01/2025
Treasure thieves damaging Neolithic symbols

வரலாற்றுத் தொல்லியல் எச்சங்கள் அதிகம் உள்ள மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம். அதே போல நார்த்தாமலை அருகே உள்ள ஊரப்பட்டி கிராமத்தின் ராமண்டாகுளம் அருகே உள்ள வனப்பகுதியை ஒட்டிய இடத்தில்  காணப்படும்  ஈம பெருங்கற்கால சின்னங்களை நள்ளிரவு நேரங்களில் புதையல் திருடர்கள் தொடர்ச்சியாக கடப் பாறை மற்றும் மண்வெட்டி கொண்டு சேதப்படுத்தி வருகின்றனர். பழங்காலங்களில் உள்ள புதைவிடங்களில் அவர்கள் பயன்படுத்திய பொன், பொருளையும் சேர்த்துப் புதைத்திருப்பார்கள் என்ற எண்ணத்தில் புதையல் தேடும் கும்பல் இது போன்ற வரலாற்றைத் தோண்டி அழித்து வருகின்றனர். இந்த தொல்லியல் சின்னங்கள் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதமுடிகிறது.

இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் சாலை கலையரசன் கூறியதாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏராளமாக உள்ள இந்த கல்திட்டைகள் பெருங்கற்கால பண்பாட்டை சார்ந்த இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களின் ஒரு வகையாகும். இது பொதுவாக நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட செங்குத்தான கற்களையும் அவற்றின் மீது சமநிலையில் தட்டையான ஒரு பலகை போன்ற ஒரு கல்லையும் வைத்திருக்கும் ஓர் அமைப்பாகும்.

இங்கு காணப்படும் பெருங்கற்காலச் சின்னங்கள்  அரிய வகையானது. ஒரே இடத்தில் சதுர மற்றும் செவ்வக வடிவில் உள்ளன. இது அபூர்வமான அமைப்பாகும். இது மாவட்டத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே காணப்படுகின்றன. இப்பருங் கற்காலச் சின்னங்கள் செம்புராங் கற்களைக் கொண்டும், கடினமான கருங்கல்களைக் கொண்டும் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து இங்கு வாழ்ந்த மக்களின் கட்டிட கலைத்திறனை அறிய முடிகிறது.

Treasure thieves damaging Neolithic symbols

இதே போல்  10க்கும் மேற்பட்ட  கல்வட்டங்களும், கற்குவியல்களும்  இங்குக் காணப்படுகின்றன. தற்போது வனப்பகுதியாக இருப்பதால்  இரவு நேரங்களில் புதையல் திருடர்கள் குழுவாக இருந்து கொண்டு இந்த அரிய வகை பெருங்கற்கால ஈமச்சின்னங்களைத் தோண்டியும் தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றனர். வனத்துறையும் - தமிழக தொல்லியல் துறையும் இந்த இடங்களிலே முறையான பாதுகாப்பு வேலி அமைத்து பெயர் பலகை வைத்தால்தான் இது போன்ற நபர்கள் மீண்டும் சேதப்படுத்தப்படாமல் மீதமுள்ள பெருங் கற்கால ஈமச்சின்னங்களைக் காப்பாற்ற முடியும். 

மேலும், தமிழகத் தொல்லியல் துறை உடனடியாக இந்த இடத்தை ஆய்வு மேற்கொண்டு சேதப்படுத்தப்பட்டு வரும் நினைவுச் சின்னங்களை அடையாளப்படுத்திப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுகுறித்த தகவல்களை அனைவரும் அறியும் வண்ணம் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்றார்.

சார்ந்த செய்திகள்