சென்னையில் இரண்டு அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இது தொடர்பாக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று (07.09.2024) சென்னை திரும்பினார். இதனையடுத்து மகாவிஷ்ணு விமான நிலையத்திலேயே வைத்து அடையாறு போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், “என்னைப் பொருத்தவரை, ஒரு பிரச்சனை என் கவனத்திற்கு வந்தால் கண்டிப்பாக அந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு என அதற்கான நடவடிக்கை எடுத்துவிட்டு அடுத்த வேலையை நோக்கிச் சென்றுவிடுவேன்.
மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தும் நோக்கில் பேசியதாக மகாவிஷ்ணு மீது புகார் கொடுத்திருக்கிறார்கள். தற்போது காவல்துறை வசம் உள்ளார். அவர் தவறு செய்தாரா இல்லையா என்பது குறித்து சட்டம் தன் கடமையைச் செய்யும். முதல்வரின் ஆலோசனையின் படி பள்ளிகளில் நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பாக வரையறுக்கக் குழு அமைக்கப்படும். சாதி, மதம் பார்க்காத அமைதியான மாநிலமாக இருக்கும் நிலையில் மூடநம்பிக்கை தூண்டும் விதத்தில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு குடிமகனும் அறிவார்ந்த வகையில் சிந்திக்க வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டமே சொல்கிறது” எனத் தெரிவித்தார்.