கிருஷ்ணகிரி அருகே, யானைக் கூட்டத்தில் இருந்து தனியாகப் பிரிந்து சென்ற ஆண் யானை, கிணற்றுக்குள் தவறி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.அதற்கு வனத்துறை மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மேலுமலை பகுதிக்குள் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.அடிக்கடி இப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் யானைகள் முகாமிடுவதும்,கிராம மக்கள் விரட்டியடிப்பதும் தொடர்கதையாக உள்ளது.கடந்த பத்து நாள்கள் முன்பு மேலுமலை பகுதிக்குள் யானைகள் கூட்டமாக இருந்தன.அதில் இருந்து தனியாகப் பிரிந்து சென்ற ஆண் யானை ஒன்று,தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே வந்தது.அங்கு மலை அடிவாரத்தில் இருந்த யானை,ஒரு கிணற்றில் தவறி விழுந்தது.
இதில் யானையின் இடப்புறப் பின்பக்கக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. யானையின் பிளிறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் கிணற்றடியில் வந்து பார்த்தபோது, அங்கே யானை உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பது தெரிந்தது. கோடைக்காலம் என்பதால் கிணறு தண்ணீறின்றி வறண்டு இருந்தது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
வனத்துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்று, அந்த யானையைக் கிணற்றுக்குள் இருந்து பத்திரமாக மீட்டனர்.இதையடுத்து, அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது.மேலுமலையில் உள்ள கூட்டத்திற்குச் செல்லாமல் தனியாகச் சுற்றி வந்த அந்த யானை,கிருஷ்ணகிரி அணையின் பின்புறம் துடுகனஹள்ளி கிராமத்தின் அருகே திம்மராயனஹள்ளி பகுதிக்குச் சென்றது.
அங்குப் போதுமான உணவு கிடைக்காததால்,பின்னர் அந்த யானை அப்பகுதியில் உள்ள மாரியப்பன் என்பவரின் மாந்தோப்பில் புகுந்தது.மாம்பழ சீசன் என்பதோடு, நிழல் தரும் தோப்பும் கிடைத்ததால் அங்கேயே முகாமிட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.மிக சோர்வாகக் காணப்பட்டதால்,அந்த யானைக்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்தனர். அத்துடன் பழங்கள், வாழைத்தார்,தென்னை மர ஓலைகள் ஆகியவையும் உணவாக வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினரும் அங்கு வந்தனர். அவர்கள் யானையின் காயம்பட்ட கால் பகுதியில் வலி நிவாரணி ஊசி மருந்தைத் துப்பாக்கி தோட்டா போல சுட்டுச் செலுத்தினர்.நான்கு வலி நிவாரணி ஊசிகள் இவ்வாறு செலுத்தப்பட்டது.
இதையடுத்து யானை சற்று வலி குறைந்து,உற்சாகம் ஆனது.மேலும், பழங்களிலும் மருந்துகளைத் திணித்துச் சாப்பிடக் கொடுத்தனர்.கோடைக்காலம் என்பதால் குடிப்பதற்கும் தொட்டியில் தண்ணீர் வைக்கப்பட்டது.தண்ணீரைப் பார்த்ததும் உற்சாகம் அடைந்த அந்த யானை துப்பிக்கையால் உறிஞ்சி,உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு குளித்து மகிழ்ந்தது.வனத்துறையினர் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டு யானையைக் கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து மருத்துவக்குழுவினர் கூறுகையில், ''ஊசி மருந்துகள் மூலம் யானை விரைவில் குணமடைந்து காலை நன்றாக ஊன்றி நடக்கும்.அதன்பிறகு, காப்புக்காட்டுக்குள் பாதுகாப்பாகக் கொண்டு சென்று, மீண்டும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும்,'' என்றனர்.
யானை இருப்பதாகத் தகவலறிந்த சுற்றுவட்டாரக் கிராம மக்கள் ஏராளமானோர் அங்கே வந்து ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.