Skip to main content

கண்புரை மற்றும் தாடை அழுகல் அறுவை சிகிச்சை; கரூர் அரசு மருத்துவர்கள் சாதனை

Published on 11/02/2023 | Edited on 11/02/2023

 

karur government medical college hospital doctors new achievements 

 

கரூரில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு கூட்டு எதிர் நுண்ணுயிர் சிகிச்சை மையத்தில் உறுப்பினராக இருந்து மருந்து வாங்கி உட்கொண்டு வருபவர்களில் 5 நபர்களுக்கு முதுமை காரணமாக கண்புரை நோய் ஏற்பட்டது. வழக்கமாக எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கண் அறுவை சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால், முதன்முறையாக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சீனிவாசன் வழிகாட்டுதலின்படி மருத்துவக் குழுவினர் மூதாட்டி ஒருவர் உட்பட ஐந்து பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்துள்ளனர். கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதன்முறையாக இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களுக்கு முதல்வர் சீனிவாசன் வாழ்த்து தெரிவித்தார்.

 

அதே போன்று, நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரைச் சேர்ந்த 43 வயதாகும் நபர் ஒருவர் தாடை அழுகல் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த அவருக்கு பல், முகம் மற்றும் தாடை சிறப்பு மருத்துவர் செந்தில்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். அதிக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டதால் அவருக்கு தாடை அழுகல் நோய் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

 

பல், முகம் மற்றும் தாடை அறுவை சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனைகள் மேற்கொண்ட பொழுது அவரது மேல்தாடை எலும்பு, கண்கூடு தாடை எலும்பு மற்றும் சல்லடை எலும்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்துள்ளது என்பது சதை பரிசோதனை நிபுணரால் உறுதி செய்யப்பட்டது. பொது மருத்துவரால் அவரது சர்க்கரை அளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பொதுவாக இத்தகைய சிகிச்சையில் பாதிப்புக்குள்ளான நோயாளியின் மேல்தாடையை நீக்கிய பின் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள். ஆனால், இந்த நோயாளிக்கு தாடை அழுகல் நோய் ஏற்பட்ட தாடையை அகற்றியதுடன், நவீனமாக கபால சதையை (டெம்போராலிஸ்) கண்களுக்கு பக்கவாட்டின் எலும்பின் வழியாக மேல்தாடைக்கு பதிலாக பொறுத்தி தாடை இழந்த பாதிப்பை நோயாளி உணராவண்ணம் மேற்கொள்ளப்பட்டது.

 

இந்த அறுவை சிகிச்சை பல் மற்றும் தாடை அறுவை சிகிச்சை நிபுணர், ஒட்டு உறுப்பு நிபுணர், மயக்க மருந்து நிபுணர், கண் மருத்துவர், பொது மருத்துவர் மற்றும் காது, மூக்கு மற்றும் தொண்டை நிபுணர் என பன்முக நிபுணத்துவ மருத்துவக் குழு மூலமே இதனை சரி செய்ய இயலும். அனைத்து மருத்துவ நிபுணர்களையும் ஒருங்கிணைத்து உயிர்காக்கும் இந்த நவீன அறுவை சிகிச்சை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சீனிவாசன் தலைமையில் முதன்முறையாக இங்கு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டு இருந்தால் சுமார் 5 முதல் 7 லட்சம் செலவாகி இருக்கும். ஆனால், இது முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. எனவே வரும் காலங்களிலும் அறுவை சிகிச்சைகளுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்