
மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் அருகே முட்டம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ராஜ்குமார், தங்கதுரை மற்றும் மூவேந்தன் என்ற 3 பேரும் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இத்தகைய சூழலில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறை சார்பில் முட்டம் பகுதியில் சாராய விற்பனை தடுப்பு நடவடிக்கை நடைபெற்றது. அப்போது சாராய வியாபாரியான ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து நேற்று ராஜ்குமார் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.இருப்பினும் தொடர்ந்து சாராய விற்பனை செய்துள்ளார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன், “ஏன் தெருவில் சாராயம் விற்கிறீர்கள்?” எனக் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சாராய வியாபாரிகள் சிறுவனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. சிறுவன் தாக்கப்பட்டது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த இதனை முட்டம் வடக்குத் தெருவைச் சேர்ந்த கல்யாண்குமார் மகன் இளைஞர் ஹரிஷ் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் மாணவன் ஹரிசக்தியும் நேற்று மாலை தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இந்த வாக்குவாதத்தைத் தடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த சாராய வியாபாரிகள் ராஜ்குமார் மூவேந்தன், தங்கதுரை ஆகியோர் ஹரிஷ், ஹரிசக்தி ஆகிய இருவரையும் சரமாரியாகக் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் இந்த இளைஞர்கள் இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து இரட்டை படுகொலை குறித்து பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சாராய வியாபாரிகள் 3 பேரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அதே சமயம் இந்த இரட்டை படுகொலை சம்பவத்தில் மேலும் இருவரைக் கைது செய்ய வலியுறுத்தி படுகொலை செய்யப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார். சாராய வியாபாரிகளால் இரண்டு இளைஞர்கள் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.