ராக்கெட் ராஜா. ஒரு காலகட்டத்தில் தாட்டியமாக வலம் வந்தவர். கராத்தே செல்வினின் கூட்டாளியும் வலது கையுமாகச் செயல்பட்டவர். நெல்லை மாவட்டத்தின் திசையன்விளைப் பக்க முள்ள ஆனைகுடியைச் சேர்ந்தவர். ஆறுமுகப்பாண்டியன் என்கிற பாலவிவேகானந்தன் என்ற பெயரைக் கொண்டவர். கராத்தே செல்வினின் கூட்டாளியாக அதிரடியாகச் செயல்பட்டதுடன் துடிப்பான இளைஞர்களின் வட்டத்தைக் கொண்டவர் என்றதால் பின்னாட்களில் ராக்கெட் ராஜா என்றழைக்கப்பட்டார்.
காரத்தே செல்வினின் மறைவிற்குப் பின்பு வெங்கடேசப் பண்ணையாரின் பக்கம் இணைந்தவர். சர்ச்சைகளுக்குக் குறைவில்லாதவர். வெங்கடேசப் பண்ணையாரின் மறைவிற்குப் பின் பனங்காட்டுப்படை என்ற கட்சியை உருவாக்கிய ராக்கெட் ராஜா அதன் நிறுவனரானார்.
தன் மீதான் பல்வேறு வழக்குகளில் பெரும்பாலான வழக்குகளிலிருந்து ராக்கெட் ராஜா விடுதலையானாலும், பேராசிரியர் செந்தில்குமார் என்பவரது கொலை வழக்கு உள்ளிட்ட சிலவைகள் இன்றைய லெவல் வரை விசாரணையில் உள்ளன. இதன் காரணமாகவே சென்னை, மும்பை, புனே என்று தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டிருப்பவர் ராக்கெட்ராஜா. தவிர மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பெங்காலி பெண்ணை திருமணம் செய்த ராக்கெட் ராஜா, கொல்கத்தாவின் நேபாள பார்டரில் உள்ள ஒரு கிராமத்தில் குடியிருந்திருக்கிறார். அங்கிருந்தபடியே மும்பை, புனே என்று பறப்பவர், அங்குள்ள தமிழர்களிடம் வட்டிக்குப் பணம் கொடுக்கல் வாங்கலான ஃபைனான்ஸ் தொழிலையும் மேற்கொண்டு வந்திருக்கிறார்.
இதனிடையே அவ்வப்போது தனது சொந்த ஊரான ஆனைகுடிக்கு வரும்பொருட்டு, வழக்குகள், போலீசின் தேடல்களிருந்து தப்பிப்பதற்காக சென்னை வழியைத் தவிர்த்து விட்டு மும்பை, கொல்கத்தாவிலிருந்து விமானம் மூலமாக திருவனந்தபுரம் ஏர்போர்ட் வந்திறங்குபவர் அங்கிருந்து நாகர்கோவில் வழியாக பக்கமுள்ள ஆனைகுடி வந்து விட்டுத் திரும்புகிற ராக்கெட் ராஜாவின் பயணங்கள் ரகசியமாகவே வைக்கப்படுமாம்.
இந்த நிலையில், கடந்த ஜூலை 28ம் தேதியன்று நள்ளிரவு நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரிப் பக்கமுள்ள மஞ்சங்குளத்தைச் சேர்ந்த சாமித்துரை என்கிற வாலிபர் தனது வீட்டின் முன்பு தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த வேளையில், திடீரென்று அவரை வளைத்த மர்ம கும்பல் ஒன்று காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்று வெட்டிக் கொலை செய்தது. ஏரியாவில் சூட்டைக் கிளப்பிய இந்தக் கொலைச் சம்பவம் பற்றி, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் 2019ன் போது நாங்குநேரி அருகேயுள்ள ஏர்வாடி பக்கமிருக்கும் கோதைசேரியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரது கொலைக்குப் பழிக்குப் பழியாக சாமித்துரை கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. 2019ன் போது சாமித்துரையும் அவரது சகாக்களும் இரவு வேளை நாங்குநேரி அருகேயுள்ள டாஸ்மாக் ஒன்றில் மது அருந்தியிருக்கின்றனர். அது சமயம், செல்வக்குமாரும் தனது நண்பர்களுடன் அதே பாரில் மது அருந்தியிருக்கிறார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாகியதில் செல்வகுமார் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
இந்தச் சம்பவத்தில் சாமித்துரையும் சம்பந்தப்பட்டிருப்பதால் அவரை கடந்த ஜூலை 28 அன்று செல்வகுமார் தரப்புகள் பழிக்குப் பழியாகப் கொலை செய்திருக்கின்றாராம். இதனிடையே சாமித்துரை கொலை தொடர்பாக செல்வகுமாரின் உறவினர் முருகேசன், விக்டர் உட்பட, சஞ்ஜிவ்ராஜ் ஸ்ரீராம்குமார், ஆனந்த், ராஜசேகரன், பிரவீன் ராஜ், ராஜ்பாபு, ஆனந்தராஜ் மற்றும் ஜேக்கப், உள்ளிட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 8 பேர் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள்.
இதற்கிடையே கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பேரை நாங்குநேரி போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்ததில், சம்பவத்தில் பனங்காட்டுப்படை கட்சியின் நிறுவனர் தலைவர் ராக்கெட் ராஜா உட்பட ஒரு சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக தெரிவித்ததையடுத்து நாங்குநேரி ஏ.எஸ்.பி.யான ரஜத் சதுர்வேதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ராக்கெட் ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்களைத் தீவிரமாகத் தேடியுள்ளனர்.
இந்த நேரத்தில் டி.ஜி.பி.யான சைலேந்திரபாபு, ஆபரேஷன் மின்னல்வேக ரவுடி வேட்டையை மாநிலம் முழுமையிலும் நடத்த உத்தரவிட்டதையடுத்து ஒவர் நைட்டில் ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அதே சமயம் ராக்கெட் ராஜாவையும் வளைக்க தனிப்படை வியூகமெடுத்தது. ராக்கெட்ராஜாவின் பயோடேட்டா முழுமையையும் அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பிய தனிப்படை, இவர் எந்த விமான நிலையத்திற்கும் வந்தடையும் பொருட்டு விமான டிக்கெட் போட்டால் உடனடியாக தொடர்புடைய காவல் தலைமைக்குத் தகவல் தர வேண்டுமென்று அவசர அறிவுறுத்தலனுப்பியிருக்கிறது. அதே சமயம், வழக்கமாக தனது சிகிச்சையின் பொருட்டு ஆனைகுடி வந்து செல்லும் ராக்கெட் ராஜா மும்பையிலிருந்து கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு ப்ளைட் டிக்கெட் போட, தகவல் மின்னல் வேகத்தில் தனிப்படைக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. நேற்றைய தினம் காலை 10 மணியளவில் திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் வத்திறங்கிய ராக்கெட்ராஜாவை ஏ.எஸ்.பி. ரஜத் சதுர்வேதி தலைமையிலான தனிப்படையினர் வளைத்துக் கஷ்டடிக்குள் கொண்டு வந்திருக்கின்றனர், என்கிறார்கள்.
சாமித்துரை கொலையில் தொடர்புடையவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டிருக்கிறார் என்கிறார் நெல்லை மாவட்ட எஸ்.பி.யான சரவணன்.
குறிப்பாக தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆபரேஷன் மின்னல் வேக ரவுடிகள் வேட்டையில் ராக்கெட் ராஜாவின் அரெஸ்ட் தென் மாவட்டத்தில் பரபரப்பையும் தகிப்பையும் கிளப்பியிருக்கிறது.