சேலம் மக்களவை தொகுதியில் அமமுக சார்பில் எஸ்.கே.செல்வம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் எம்எல்ஏ, சேலத்தில் பரப்புரை செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகளின் பசுமையான விளை நிலங்களை அழித்து, எட்டுவழிச்சாலையைக் கொண்டு வர முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். கல்வராயன் மலையில் உள்ள தாதுக்களை தனியார் மூலம் கொள்ளையடிக்கவே இத்திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் செய்யாத துரோகமே இல்லை. பணத்துக்காக எல்லாத்தையும் செய்திருக்கின்றனர். கட்சி தொண்டர்களுக்கும், மக்களுக்கும் துரோகம் செய்த பழனிசாமியின் வேட்பாளர்கள், டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள்.
கல்லாபெட்டி பழனிசாமியை ஒழிக்க நான் பரிசுபெட்டியோடு வந்திருக்கேன். அதுவும் உச்சநீதிமன்றம் சென்று இந்த சின்னத்தை பெற்றுள்ளேன். மோடியா? லேடியா? என்று கேட்ட ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி நடத்துகிறோம் எனக்கூறிக்கொண்டு, தற்போது மோடியை எங்கள் 'டாடி' என்று வாய் கூசாமல் சொல்கின்றனர். இவர்கள் எல்லாம் பணம் கிடைக்கிறது என்றால் எதையும் செய்வார்கள்.
இந்த தேர்தல் முடிந்ததும், சேலம் மார்க்கெட்டில் பழனிசாமியை பார்க்கலாம். பழைய தொழிலுக்கு வந்துடுவாருனு நான் சொல்றேன். சட்டமன்றத்தில் ஜெயலலிதா படத்தை திறக்கக்கூடாது என்று சொன்ன ராமதாசுடன் அவருடயை வீட்டுக்கே சென்று கூட்டணி வைத்து, உண்மை தொண்டர்களை ஏமாற்றி விட்டார்கள்.
அதனால் மக்களை பிச்சைக்காரர்களாக மாற்ற நினைக்கும் அதிமுக கூட்டணியை தோற்கடித்து, சுயேச்சைகளாக இருக்கும் எங்களை வெற்றி பெறச்செய்யுங்கள். நாங்கள் யார் பிரதமர் என்று தீர்மானிக்கிறோம். இவ்வாறு டிடிவி.தினகரன் பேசினார்.