தமிழகம் முழுவதும் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களுக்கு புதிய எஸ்பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் காவல்துறையில் பதவி உயர்வு, தன் விருப்பம், நிர்வாக நலன் உள்ளிட்ட காரணங்களால் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, சேலம் மாவட்ட காவல்துறை எஸ்பி ஆக பணியாற்றி வந்த ஸ்ரீஅபிநவ், ஹைதராபாத் காவலர் பயிற்சி பள்ளி இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சொந்த மாநிலத்தில் பணியாற்ற விருப்பம் தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்ததன் பேரில், அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இதையடுத்து, சேலம் மாவட்ட புதிய எஸ்பி ஆக மருத்துவர் ஆர்.சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு சேலம் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு எஸ்பி ஆக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய சொந்த ஊர், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வடுகம் ஆகும். நாமக்கல் மாவட்ட எஸ்பி ஆக பணியாற்றி வந்த சாய்சரண் தேஜஸ்வி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரும் சொந்த மாநிலத்திற்கு பணிக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்பேரில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு சாய்சரண் தேஜஸ்வி ஆந்திர மாநில தேசிய காவலர் பயிற்சி மையத்திற்கு மாற்றப்பட்டார்.
இதையடுத்து தர்மபுரி மாவட்ட எஸ்பி ஆக பணியாற்றி வரும் சி.கலைச்செல்வன், நாமக்கல் மாவட்ட புதிய எஸ்பி ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் சிஐடி சிறப்பு பிரிவு எஸ்பி ஆக பணியாற்றி வரும் என்.ஸ்டீபன் ஜேசுபாதம், தர்மபுரி மாவட்டத்தின் புதிய எஸ்பி ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் உட்பட மொத்தம் 20 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக கூடுதல் முதன்மை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.