உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு பாதிப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, கொரோனாவின் இரண்டாம் அலையின் போது மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. மருத்துவத் துறையில் அதிகப்படியான செவிலியர்கள் தேவைப்பட்டதால் தற்காலிகச் செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டனர். இந்த ஒப்பந்தச் செவிலியர்களின் பணிக்காலம் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்ததாக தமிழக அரசு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, ஒப்பந்தச் செவிலியர்கள் தங்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பாமக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்தச் செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கவேண்டும் என்று வலியுறுத்தின.
இதுகுறித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பணி நீட்டிப்பு பெறாத ஒப்பந்தச் செவிலியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும் என்றார். மேலும், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்திலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாற்றுப்பணி வழங்கப்படும் என்றும், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு ஒப்பந்தச் செவிலியர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும் என்றும், அதனால், ஒப்பந்தச் செவிலியர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் ஒப்பந்தச் செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யக் கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், எங்கள் பணிக்காலம் நிறைவடைந்தாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும். ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்திலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் எங்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டால், அது எங்களுக்கு நிரந்தரப் பணியாக இருக்காது. அதனால், எங்களுக்குப் பணிப்பாதுகாப்பு வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் தெரிவிக்கின்றனர்.