Skip to main content

செங்கோட்டையன் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர்

Published on 15/02/2025 | Edited on 15/02/2025

 

The Chief Minister fulfilled Sengottaiyan's request

சென்னையில் அரசு அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அறிவிப்புகளை வெளியிட்டு தமிழக முதல்வர் பேசுகையில், ''அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் கடந்த கூட்டத்தில் கூறியபடி தேங்காய் விவசாயிகளுக்கு மிக விரைவாக பணப்பட்டுவாடா செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் பி.எம் ஏஒய்ஜி திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு அலகு தொகை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இது தொடர்பான கருத்துரு ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. முனைவர் சுப்புராமன் கோரிக்கையை ஏற்று குழந்தைகளுக்கு கட்டப்படுகின்ற அங்கன்வாடி கழிப்பறைகளுக்கான மதிப்பீட்டுத் தொகை 2025-26 நிதியாண்டில் இருந்து 30 ஆயிரம் ரூபாயிலிருந்து 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பிரதம மந்திரி கிராம சாலை திட்டம்; பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம்; தேசிய வளர்ச்சி திட்டம்; துளிநீர் அதிகபயிர்; பிரதான் மந்திரி மாத்ரு யோஜன; மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை போடுற திட்டங்களின் செயல்பாடுகள் இந்த கூட்டத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு திட்டம் குறித்தும் முக்கியமான சில தகவல்களை சொல்கிறேன். பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு இந்தியாவில் முன்னோடி மாநிலமாக இருக்கிறது. இந்த திட்டத்தின் நான்காவது கட்ட செயல்பாட்டை 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையாகக் கொண்டு 500க்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட, இதுவரை இணைப்பு சாலை வசதி இல்லாத கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்த ஒன்றிய அரசு அனுமதி அளித்திருக்கிறது. இப்படியாக 7 கிராமங்கள் தான் தமிழ்நாட்டில் இருக்கிறது. வன பாதுகாப்பு சட்டத்தின் படி அனுமதிபெற்ற பிறகு தான் அங்கே இணைப்பு சாலை வசதி ஏற்படுத்த முடியும். அதனால் ஏற்கனவே உள்ள சாலைகளை மேம்படுத்த ஒன்றிய அரசு அனுமதி வழங்க வேண்டும். உறுப்பினர்களின் ஆலோசனைகளுடன் மீண்டும் ஒன்றிய அரசுக்கு இதுகுறித்து வலியுறுத்தப்படும். பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தின் மூலம் ஒரு வீட்டிற்கான அலகு தொகை ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய். ஒன்றிய அரசு 72 ஆயிரம் ரூபாயும், மாநில அரசு 48 ஆயிரம் ரூபாயும் வழங்கி வரும் நிலையில் மாநில அரசு கூடுதலாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை மேற்கூரை அமைக்க வழங்கி வருகிறது'' என்றார்.

சார்ந்த செய்திகள்