புதுச்சேரி முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் காவலராகப் பணி புரிந்து வருபவர் ஞானசேகர். இவரது 70 வயது தாய் நேற்று முன்தினம் (17.08.2020) திடீரென வீட்டிலேயே உயிரிழந்தார். அவருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்வதற்காக உடல் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பரிசோதனையில், இறந்த அவரது தாயாருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. அதையடுத்து நேற்று (18.08.2020) தாயின் உடலை அடக்கம் செய்ய சிபாரிசின் அடிப்படையில் கேட்டு இருந்தார். உடல் ஆம்புலன்ஸ் மூலம் தேங்காய்த் திட்டு இடுகாட்டுக்குக் கொண்டு வரப்பட்டு, சடங்குகள் செய்து எரியூட்டப்பட்டது.
இதனிடையே புதுச்சேரி வில்லியனூர் மணவெளி திரிவேணி நகரில் வசிக்கும் யோகானந்த் என்பவரது மனைவி குணவள்ளி(43) மூச்சு இரைப்பு நோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில வருடங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 16.08.2020 அன்று இவருக்கு மூச்சு இரைப்பு அதிகமானதால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்து விட்டார். இதனால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து வில்லியனூர் போலீசாருக்கு தகவல் அளித்த யோகானந்த் தனது மனைவியை கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறியதுடன் கரோனோ பரிசோதனைக்கு உட்படுத்தி விட்டு பிணத்தைப் பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் மர்மமான முறையில் இறந்திருப்பதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இறந்த குணவள்ளிக்கு கரோனா தொற்று இல்லை என முடிவு வெளியான தகவல் வந்ததையடுத்து பிணத்தை எடுத்துச் செல்வதற்காக நேற்று யோகானந்த் மற்றும் உறவினர்கள் ஆம்புலன்ஸ் உடன் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். பிணவறைக்குச் சென்று பார்த்தபோது குனவள்ளியின் உடல் காணவில்லை. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து உடலை தேடினர். இதுதொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமிக்கு புகார் தெரிவித்தனர்
கரோனா பரிசோதனைக்கு அனுப்பிவைத்த உடலை சவக்கிடங்கில் மாற்றி எடுத்துக் கொடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போதுதான் போலீஸ்காரர் தாயாருக்கு பதிலாக குணவள்ளியின் உடலை மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்சில் அனுப்பி வைத்துள்ளது தெரியவந்தது. இதில் குறிப்பிட வேண்டிய செய்தி குணவள்ளிக்கு கரோனா தொற்று இல்லை. போலீஸ்காரரின் தாயாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தாயின் உடல் என நினைத்து அந்த போலீஸ்காரரும் இறுதிச் சடங்குகளைச் செய்துள்ளார். மேலும் குறிப்பிட வேண்டிய செய்தி இறந்த இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு சமூகத்திற்கும் வெவ்வேறு சடங்கு முறை இருக்கும்.
விவகாரம் சிக்கலானதையடுத்து குணவள்ளியின் கணவரிடம் முதலமைச்சர் நாராயணசாமி பேசி 'தவறு நடந்து விட்டது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்று வாக்குறுதி அளித்துள்ளார். மேலும் மருத்துவமனை சார்பில் எரியூட்டப்பட்ட குனவள்ளியின் அஸ்தி அவரது கணவரிடம் வழங்கப்பட்டது. மருத்துவமனை ஊழியர்கள் போலீஸ்காரரின் தாயார் உடலை எடுத்துச்சென்று எரியூட்டினர்.
புதுச்சேரியில் கவனக்குறைவால் சடலங்கள் மாற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.