பெண்கள் கர்ப்பமானால் அவர்களுக்கு வளைகாப்பு நடத்துவது தென்னிந்தியாவில் வழக்கம். காதல் திருமணம் செய்துக்கொண்டவர்கள், சாதி மறுப்பு திருமணம் செய்துக்கொண்டவர்களை பெற்றோர்கள் ஏற்காததால் அந்த தம்பதியினர் தனிக்குடித்தனம் நடத்துவார்கள். இதனால் அந்த கர்ப்பிணி பெண்களுக்கு வளைக்காப்பு என்பது கனவாகவே இருந்தது.
கடந்த 2006- 2011 திமுக ஆட்சியில், முதல்வராக இருந்த கலைஞர், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பதிவு பெற்று மருத்துவ சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணி பெண்கள் அனைவரையும் ஒரே இடத்தில் அமர்த்தி அவர்களுக்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என்றார். அப்போது சாதாரணமாக தொடங்கிய சமுதாய வளைக்காப்பு என்பது தற்போது ஒவ்வொரு ஆண்டும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நடைபெற துவங்கியுள்ளது. தற்போது இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து மக்கள் பிரதிநிதிகளும் கலந்துக்கொள்ள துவங்கியுள்ளார்கள்.
வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை நகரத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சி செப்டம்பர் 29ந்தேதி நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மு.சாந்தி பிரியதர்ஷினி அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், வேலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான ஆர்.காந்தி தனது மனைவியுடன் சென்று கலந்துக்கொண்டு தம்பதிகளை வாழ்த்தினர்.
வளைக்காப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட 88 கர்ப்பிணி பெண்களுக்கு காந்தி தனது சொந்த செலவில் அவர்களுக்கு பரிசுபொருட்களை வழங்கி ஆசீர்வதித்தார்கள்.