திருச்சியைச் சேர்ந்த அவசர சிகிச்சை நிபுணர் மருத்துவர் முகமது ஹக்கீம் தடுப்பூசியின் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். அதில் அவர் தடுப்பூசியின் அவசியத்தைக் கொண்டு செல்லும் விதமாக செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மூன்றாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருவதால் பாதுகாப்பிற்காக உலக சுகாதார அமைப்பும், சுகாதார அமைச்சகமும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வலியுறுத்தி வருகின்றன.
தடுப்பூசி எனப்படுவது நோய் கிருமியின் செயலிழக்கபட்ட ஒரு சிறிய பாகத்தினை உடலில் செலுத்தி, அதனால் உடல் எதிர்ப்பு ஆண்டிபாடிகளை உற்பத்தி செய்து தயார் நிலையில் வைத்திருப்பது. நோய் கிருமி தாக்குதல் ஏற்படும்போது தாயாராக உள்ள ஆண்டிபாடிகள் அவற்றை அழித்து விடும். ஒவ்வொரு தடுப்பூசிக்கும் ஒவ்வொரு விதமான ஆயுட்காலம் உண்டு, கரோனா தடுப்பூசி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படும் பொழுதே அதன் ஆயுட் காலம் சில மாதங்கள் என அறிவியல் வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
நோய் கிருமி மரபணு உருமாற்றம் அடைவதனால் ஏற்படும் விளைவுகளே இந்தப் புது புது அலைகளுக்கு காரணம். உருமாற்றம் அடைந்து இருந்தாலும் மூலக்கூறு ஒன்று போல இருப்பதனால் இந்த உருமாற்றத்திற்கு எதிராக இந்தப் பூஸ்டர் தடுப்பூசி நன்கு வேலை செய்கிறது. இந்தத் தடுப்பூசி/ பூஸ்டர் ஊசி எடுத்துக் கொள்வதால் சுமார் 85% மேற்பட்ட மக்கள் லேசான அறிகுறிகளுடன் நோய் ஏற்பட்டு, எளிதில் மீழ்கின்றனர்.
கரோனா நோயால் தீவிர சிகிச்சைப் பகுதியில் சேர்க்கப்படுபவர்களில் பத்தில் ஒன்பது நபர்கள் தடுப்பூசி எடுத்து கொள்ளாதவர்கள். எனினும் மரபணு மாற்றத்தால் ஏற்படும் இந்த ஒமிக்ரான் தொற்று இணை நோய், துணை நோய் உடையவர்களையும், வயோதிகர்களையும் அதிகம் பாதிப்பதாக மருத்துவ உலகம் கூறுகிறது. எனவே சமூக இடைவெளி, முகக் கவசம், கிருமி நாசினி, கூட்டங்களைத் தவிர்ப்பது போன்ற கோவிட் சமூக நெறிகளைக் கடைபிடிப்பது கட்டாயமாகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.