![Husband-wife affair: Wife surrenders at police station](http://image.nakkheeran.in/cdn/farfuture/dfwwJ1T-nui8GVknWDL7jM8vPJG8UR-QHplW8hPJ9FU/1642057074/sites/default/files/inline-images/hus-wife.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது விளந்தை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்(39). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். மேஸ்திரி வேலை செய்வதற்காக சென்னைக்கு சென்றபோது அங்கு சுரேகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு விழுப்புரத்தில் உள்ள நாயக்கர் தோப்பு என்ற பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேஸ்திரி வேலை பார்த்து சம்பாதிக்கும் சந்தோஷ் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததும் மனைவியிடம் அவ்வப்போது தகராறு செய்து வந்துள்ளார்.
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அப்படி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பல நேரங்களில் குடிபோதை காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். வருமானம் இல்லாமல் பிள்ளைகளை வைத்துக்கொண்டு எப்படி குடும்பம் நடத்துவது என்று மனைவி சுரேகா கணவரை கண்டித்துள்ளார். இப்படிப்பட்ட பிரச்சனை காரணமாக நேற்று பிற்பகல் சந்தோஷ் மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சுரேகாவிடம் உன் நடத்தை மீது சந்தேகம் உள்ளது என்று கூறி தகராறு செய்துள்ளார்.
இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது. கோபம் அதிகரித்த நிலையில் சந்தோஷ் அங்கிருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து சுரேகாவை வெட்டுவதற்கு வந்துள்ளார். சுதாரித்துக்கொண்ட சுரேகா சந்தோஷ் வைத்திருந்த கத்தியை பிடிங்கி அவரது நெஞ்சிலேயே திருப்பி குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் இருந்த சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை எடுத்துக்கொண்டு நேராக விழுப்புரம் காவல் நிலையத்திற்குச் சென்று சரண் அடைந்துள்ளார் சுரேகா.
இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். சந்தோஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சுரேகாவிடம் விசாரணை நடத்தியதின் அடிப்படையில் அவரைக் கைதுசெய்தனர். மேலும் கணவரை கொலை செய்த சுரேகா தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.