ரயில்வே துறை, மின்சார வாரியம் என அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்குப் படித்தும் வேலை இல்லாமல் காத்திருப்போருக்கு, வேலை கொடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் அரசுக்குக் கோரிக்கை வைத்து, தமிழகம் முழுக்க இன்று (19-11-2020) மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டி.ஒய்.எஃப்.ஐ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் தலைமை தாங்கினார். ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கூறும்போது, மின் வாரியத்தில் 50,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளது. இதில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும்.
மின் வாரியத்தில் தேர்வு செய்த 10,000 கேங்மேன் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். அதேபோல், 2,500-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப உதவியாளர் (TA) பணியிடங்களை நிரப்பிட வேண்டும். மின் வாரியம் அறிவித்த 2,900 கள உதவியாளர் பணியிடங்கள் மற்றும் 1,300 கணக்கீட்டாளர் பணியிடத்தை, உடனே நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.