கரோனா தொற்று வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து கடந்த மே 10ஆம் தேதி, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. டாஸ்மாக் மதுக்கடைகளும் அடைக்கப்பட்டன. தொடர்ந்து தொற்று அதிகரிப்பதைக் கருத்தில்கொண்டு, கடந்த மே 24ஆம் தேதிமுதல் முழுமையான ஊரடங்கு அமலுக்குவந்தது. அதன்பின்னர் கடந்த 7ஆம் தேதிமுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்குவந்தது.
அதேவேளை தொற்று அதிகமாக உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு குறைவான தளர்வுகளும் மீதமிருக்கும் மாவட்டங்களுக்கு சற்று அதிகமான தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. அந்தவகையில் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் அழகு நிலையங்கள் - சலூன்கள் திறப்பு, பூங்காக்கள் திறப்பு உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மக்களின் தொடர் கோரிக்கையைத் தொடர்ந்து 27 மாவட்டங்களில் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் 50% பேர் அனுமதிக்கப்படுவார்கள். காலை 6.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 11 மாவட்டங்களில் இந்தக் கடைகளைத் திறக்க இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. நீண்ட நாட்களுக்குப் பின்னர் கடை திறந்துள்ளதால், முடி திருத்துவதற்காக இளைஞர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.