அசாம் மாநிலம் திமா ஹசாவ் மாவட்டத்தில் உம்ராங்சோ என்ற பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த நிலக்கரி சுரங்கத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சுமார் 15 முதல் 20 தொழிலாளர்கள் சிக்கியிருக்கக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து தீவிர மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. அதே சமயம் தொழிலாளர்கள் சிக்கியிருக்கக் கூடிய சுரங்கத்தில் தண்ணீர் சூழ்ந்திருப்பதாக மீட்புப் பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக திமா ஹசாவ் மாவட்ட போலீஸ் எஸ்.பி. மயங்க் குமார் ஜா ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “தற்போது வரை சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் பற்றிய சரியான எண்ணிக்கையைக் கூற முடியாது” எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ நிலக்கரிச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர் என்ற துயரச் செய்தி உம்ராங்ஷுவிலிருந்து வந்துள்ளது.
சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் பற்றிய சரியான எண்ணிக்கை மற்றும் அவர்களின் நிலை பற்றி இன்னும் தெரியவில்லை. மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்டிசி, எனது சகா கௌசிக் ராய் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும் மீட்புப் பணியில் ராணுவத்தின் உதவியைக் கோரியுள்ளோம். மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) ஆகியவையும் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளுக்கு உதவுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.