திருச்சி மாவட்டம் அதவத்தூர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவி கடந்த சில வாரங்களுக்கு முன் உடல் நலக் குறைவால் மரணமடைந்த நிலையில், இவருக்கு அருண் என்ற ஒரு மகன் உள்ளார். இரண்டாவது மனைவி லதாவுக்கு பிரபாகரன் என்ற மகனும் கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், மூர்த்தியின் மனைவி லதா மற்றும் மகன் பிரபாகரன் இருவரும் திருமண நிகழ்வுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.
வீட்டிற்குள் நுழைந்தபோது, மூர்த்தி தூக்கில் தொங்கியபடியும் மகள் கீர்த்தனா கை, கால்களில் வெட்டுக்காயங்களுடன் ஆபத்தான நிலையிலும் கிடந்துள்ளனர். இதைப் பார்த்த லதா சோமரசம்பேட்டை காவல்துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், கீர்த்தனாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், மூர்த்தியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்த காவலர்கள், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.