ஆத்தூர் அருகே, சாதி மறுப்புத் திருமணம் செய்த மகளுக்கு கட்டாயக் கருக்கலைப்பு செய்த பெற்றோரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சிறுவாச்சூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணி (40), விவசாயி. இவருடைய மனைவி செல்வி (36). இவர்களுடைய மகள் ரேணுகா தேவி (19). இவர், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ., முதலாமாண்டு படித்து வந்தார்.
கரோனா ஊரடங்கால் கல்லூரிகள் மூடப்பட்டதால் மாணவி வீட்டில் இருந்து வந்தார். அப்போது, செல்ஃபோனில் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் என நீண்ட நேரம் அரட்டை அடித்து, பொழுது போக்கி வந்துள்ளார். இதில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த கணேசன் (23) என்பவருடன் ஃபேஸ்புக்கில் நட்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து அவருடன் ஃபேஸ்புக்கில் அரட்டை அடித்து வந்ததில், அவர்களுடைய நட்பு காதலாக மலர்ந்தது. மகளின் காதல் எல்லை மீறி போனதையும், அவர் காதலிக்கும் இளைஞர் வேறு சாதியைச் சேர்ந்தவர் என்பதையும் அறிந்த ரேணுகாதேவியின் பெற்றோர் அவரை கண்டித்தனர். இந்தத் திருமணத்திற்கு ஒருபோதும் ஒத்துக்கொள்ள மாட்டோம் என்றும் கறாராக கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணின் தந்தை மற்றும் தாய்
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய காதலர்கள், திருப்பூருக்குச் சென்று சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டனர். இதையறிந்த ரேணுகாதேவியின் பெற்றோர், மகளைக் கடத்திவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தனர். காதலர்கள் ஆத்தூர் காவல் நிலையத்தில் ஆஜராகினர். அப்போது ரேணுகாதேவி, தன் பெற்றோருடன் செல்ல விருப்பமில்லை எனக்கூறி கணவருடன் முதுகுளத்தூர் சென்றுவிட்டார்.
பின்னர் ஒரு வழியாக மகளையும், மருமகனையும் சமாதானப்படுத்திய ரேணுகாதேவியின் பெற்றோர், அவர்களை கடந்த நவம்பர் மாதம் வீட்டுக்கு அழைத்து வந்து விருந்து வைத்துள்ளனர். இருவருக்கும் ஜாதகப் பொருத்தம் சரியாக அமையவில்லை. மகளுக்குப் பரிகாரம் செய்தால் சரியாகிவிடும். அதனால் ரேணுகாதேவியை மட்டும் இங்கேயே விட்டுவிட்டுச் செல்லும்படி அவருடைய பெற்றோர் புதுமணத் தம்பதிகளைப் பிரித்து வைக்கும் நோக்கத்துடன் கூறினர். இதற்கு மறுத்துவிட்ட கணேசன், இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார். அவர்கள் தலையிட்டு தம்பதிகளை முதுகுளத்தூருக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், ரேணுகாதேவி 3 மாத கர்ப்பமாக இருந்தார். அவருடைய தந்தைக்கு உடல்நலம் சரியில்லை எனப் பொய் சொல்லி, வீட்டுக்கு அழைத்தார் தாயார். அதனால் கணவருக்குத் தெரியாமல் கடந்த ஜனவரி 21ம் தேதி சிறுவாச்சூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.
வீட்டுக்கு வந்த மகளிடம், இந்தக் குழந்தை பிறந்தால் உன் கணவர் இறந்து விடுவார் என ஏதேதோ சொல்லி மகளின் மனதை மாற்றிய பெற்றோர், அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்துள்ளனர். இதுகுறித்து ரேணுகாதேவி கணவரிடம், என்னை ஏமாற்றி, கருக்கலைப்பு செய்ய வைத்துவிட்டனர் என அழுது புலம்பியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கணேசன், உடனடியாக இதுகுறித்து சேலம் மாவட்ட எஸ்பிக்கு செல்ஃபோன் மூலம் புகார் அளித்தார். இதையடுத்து எஸ்பி தீபா கணிகர் உத்தரவின் பேரில், ஆத்தூர் மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் மகளுக்குக் கட்டாயக் கருக்கலைப்பு செய்ததாக வழக்குப் பதிவுசெய்து சுப்ரமணி, செல்வி ஆகியோரைக் கைது செய்தனர். விசாரணையில், ரேணுகாதேவி சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டது அவருடைய பெற்றோருக்குப் பிடிக்காததால், வெறுப்பில் மகளுக்குக் கட்டாயக் கருக்கலைப்பு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.