சேலம் மாவட்டம் மல்லூர் புது வீதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்(29). பி.இ. பொறியியல் படித்துள்ளார். இவருக்கு திருமணாகி நவ்யா என்ற மனைவியும், 2 வயதில் மகளும் உள்ளார். ஹரிகிருஷ்ணன் கடந்த இரண்டரை மாதங்களாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை காஞ்சிக்கோவில் சாலை வேதாத்திரி நகரில் குடும்பத்துடன் தங்கி, சிப்காட்டில் உள்ள ஸ்டீல் நிறுவனத்தில் இளநிலை பொறியாளராக வேலை பார்த்து வந்தார். ஹரிகிருஷ்ணன் பிற நிறுவனங்களில் பெரிய வேலைக்கு முயற்சி செய்து வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன் கோவை மாவட்டத்தில் பெரிய கம்பெனியில் வேலைக்கு விண்ணப்பித்து, நேர்காணலுக்கு சென்றார். அந்த கம்பெனியை சேர்ந்தவர்கள் ஹரிகிருஷ்ணனிடம் போதுமான அளவு முன் அனுபவம் இல்லை என தெரிவித்துள்ளனர். இதனால், வேலை கிடைக்காத விரக்தியில் ஹரிகிருஷ்ணன் இருந்துள்ளார். கடந்த 4-ம் தேதி ஹரிகிருஷ்ணன் மனைவி மற்றும் குழந்தையை சேலத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அதன்பிறகு ஹரிகிருஷ்ணனுக்கு அவரது மனைவி போன் செய்தபோது எடுக்கவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த ஹரிகிருஷ்ணனின் தந்தை கந்தசாமி பெருந்துறை வந்து ஹரிகிருஷ்ணன் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது, ஹரிகிருஷ்ணன் குழந்தையின் தொட்டில் துணியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹரிகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஹரிகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.