தமிழக ஆளுநரான ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக இன்று குடும்பத்தினருடன் கன்னியாகுமரிக்கு வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த அவர் அங்கிருந்து 12.30 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்து சேர்ந்தார். அரசு விருந்தினர் மாளிகையில் அவரை மாவட்ட ஆட்சியர் அரவிந்த், காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மற்றும் மாவட்ட நீதிபதி ஆகியோா் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் சற்று ஒய்வுக்கு பிறகு ஆளுநர் தனது குடும்பத்தினருடன் நடுக்கடலில் வானுயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலைக்கு படகில் சென்று அங்கு திருவள்ளுவரின் சிலையின் பாதத்தில் மலர் தூவி வணங்கினார். அதன் பிறகு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்ற அவர், அங்கிருந்து சிறிது நேரம் கடல் அழகையும் சூரியன் மறைவதையும் கண்டு ரசித்தார்.
அதன் பிறகு மாலை 7 மணிக்கு படகு மூலம் கரைக்கு திரும்பினார். தொடர்ந்து நாளை காலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி பாலாஜி கோவில் மற்றும் சுசீந்திரம் தாணுமாலையன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து விவேகானந்தா கேந்திராவுக்கு செல்லும் அவர் மதியம் சென்னை புறப்பட்டு செல்கிறார். ஆளுநர் வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.