சி.ஏ.ஏ. சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற மாட்டார்கள் என மூத்த வழக்கறிஞரும், முன்னாள் நிதியமைச்சரின் மனைவியுமான நளினி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி., இத்தகைய சட்டங்களைக் கொண்டு வருவதால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாதிக்கப்படுகிறது என்றும் இதிலிருந்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மனிதச் சங்கிலி போராட்டம் ஈடுப்பட்டனர். இதில் கலந்து கொண்ட மூத்த வழக்கறிஞர்கள் வைகை, நளினி சிதம்பரம், என்.ஜி.ஆர். பிரசாத், கண்ணதாசன், சுதா ஆகியோர் கழுத்தில் பதாகைகளை ஏந்தி மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதன் பின்னர் பேட்டியளித்த நளினி சிதம்பரம், இந்த மனிதச் சங்கிலிப் போராட்டமானது இந்துக்களுக்கு எதிராகவும், முஸ்லீம்களுக்கு ஆதாரவாகவும் நடத்தப்படும் போராட்டம் அல்ல என்றார். பின்னர் சட்டங்கள், அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி., சட்டங்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். மேலும், இத்தகைய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற மாட்டார்கள். அது தங்கள் கோரிக்கையும் இல்லை என தெரிவித்தார்.